சினிமா பாணியில் 8 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றிய சாப்ட்வேர் என்ஜினீயர்

ஆந்திரா மற்றும் தெலுங்கானாவை சேர்ந்த 8 பெண்கள் ஐதராபாத் பிரஸ் கிளப்பில் நிருபர்களுக்கு பேட்டியளித்தனர்.;

Update: 2022-07-14 08:16 GMT

திருப்பதி:

ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்தவர் சிவசங்கர் பாபு. இவர் ஒரு பிரபல சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து வருவதாகவும் லட்சக்கணக்கில் சம்பாதிப்பதாகவும் கூறி 8 பெண்களை தனது வலையில் வீழ்த்தி திருமணம் செய்து மோசடி செய்துள்ளார்.

இதுகுறித்து ஆந்திரா மற்றும் தெலுங்கானாவை சேர்ந்த 8 பெண்கள் ஐதராபாத் பிரஸ் கிளப்பில் நிருபர்களுக்கு பேட்டியளித்தனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது:-

குண்டூரைச் சேர்ந்தவர் சிவ சங்கர் பாபு. இவர் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து வருவதாகவும் லட்சக்கணக்கில் சம்பாதிப்பதாகவும் கூறி மேட்ரிமோனியில் பதிவிட்டிருந்தார்.

குறிப்பாக திருமணம் ஆகி விவாகரத்து பெற்ற வசதி படைத்த பெண்களை மட்டுமே மேட்ரிமோனி மூலம் கண்டுபிடித்து அவர்களுக்கு காதல் வலை வீசினார். அவர் கூறுவதை உண்மை என நம்பிய நாங்கள் அவரை காதலித்து திருமணம் செய்து கொண்டோம். திருமணம் செய்துகொண்ட சில மாதங்களில் எங்களிடமிருந்த விலை உயர்ந்த நகை பணத்தை எடுத்துக்கொண்டு ஓடிவிடுவார்.

இதே போல் பல பொய்களை சொல்லி 8 பெண்களை அவர் ஏமாற்றி திருமணம் செய்துள்ளார். சிவசங்கர் பாபு திருமணம் செய்து கொண்ட சில பெண்கள் தற்போது கர்ப்பமாக உள்ளனர். 8 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டு நகை, பணத்தை ஏமாற்றிய சிவசங்கர் பாபு மீது குகட்பல்லி, ஆர்.சி.புரம், பாலாநகர், ராய்துர்கம் சைபராபாத் போலீஸ் நிலையங்களிலும், ஆந்திராவின் குண்டூர் மற்றும் அனந்தபூர் போலீஸ் நிலையங்களிலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனாலும் போலீசார் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த மே 16-ந் தேதி கோண்டாப்பூரில் உள்ள ஒரு வீட்டிற்கு அவர் அடிக்கடி செல்வதைக் கண்டு அவரால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் ஆர்.சி.புரம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மேலும் பெண்களை சிவசங்கர் பாபு ஏமாற்றாமல் இருக்க அவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கூறினர். நான் அவன் இல்லை சினிமா பட பாணியில் பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து நகை, பணம் பறித்து மோசடி செய்துள்ளார். இந்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்