இன்ஸ்டாகிராமில் பழக்கம்: உறவுக்கு வர மறுத்த 'லிவ் இன்' காதலியை கொன்ற காதலன் - அதிர்ச்சி சம்பவம்
இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்ட நிலையில் இருவரும் வாடகை வீட்டில் ஒன்றாக வசித்துள்ளனர்.;
போபால்,
மத்தியபிரதேச மாநிலம் குணா மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் பிரவீன் சிங் (வயது 24). இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் 20 வயது இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதையடுத்து, இளம்பெண் கடந்த சில நாட்களுக்கு முன் வீட்டை விட்டு வெளியேறி காதலன் பிரவீன் சிங் உடன் இந்தூர் மாவட்டம் ராவ்ஜி பஜார் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து ஒன்றாக வசித்துவந்தார்.
இந்நிலையில், கடந்த 7ம் தேதி தனது லிவ் இன் காதலியை பிரவீன் சிங் உறவுக்கு அழைத்துள்ளார். ஆனால், இளம்பெண் உறவுக்கு வர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பிரவீன் சிங் வீட்டில் இருந்த கத்தரிகோலால் காதலியின் கழுத்தில் சரமாரியாக குத்தினார். இதில், இளம்பெண் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து உயிரிழந்தார்.
இதையடுத்து, வீட்டை பூட்டிவிட்டு பிரவீன் சிங் தப்பியோடிவிட்டார். 2 நாட்களாக வீடு பூட்டி இருந்ததை கண்டு சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து வந்த போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது அங்கு இளம்பெண் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அப்பெண்ணின் உடலை கைப்பற்றிய போலீசார், உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் லிவ் இன் காதலியை கொலை செய்துவிட்டு தப்பியோடிய பிரவீன் சிங்கை கடந்த 9ம் தேதி இந்தூரில் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பிரவீன் சிறையில் அடைக்கப்பட்டார்.