லட்சக்கணக்கான இந்தியர்களின் மனதின் குரல், உணர்வுகளின் வெளிப்பாடே மன் கி பாத் நிகழ்ச்சி: பிரதமர் மோடி பேச்சு
லட்சக்கணக்கான இந்தியர்களின் மனதின் குரல் மற்றும் உணர்வுகளின் வெளிப்பாடே மன் கி பாத் நிகழ்ச்சி என பிரதமர் மோடி பேசி உள்ளார்.;
புதுடெல்லி,
பிரதமர் மோடி பங்கேற்கும் 100-வது மன் கி பாத் நிகழ்ச்சி இன்று காலை 11 மணியளவில் தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசும்போது, மன் கி பாத் நிகழ்ச்சியின் 100-வது தொடர் இன்று நடைபெறுகிறது. ஆயிரக்கணக்கான கடிதங்கள், லட்சக்கணக்கான செய்திகள் எனக்கு வந்து உள்ளன. அவற்றில் பலவற்றையும் ஆழ்ந்து பார்க்க நான் முயற்சித்துள்ளேன்.
உங்களது கடிதங்களை படிக்கும்போது பல தருணங்களில் நான் உணர்ச்சிவசப்பட்டு இருக்கிறேன். உணர்ச்சிவசத்தில் அடித்து செல்லப்பட்டு, பின்னர் என்னை நானே இயல்பு நிலைக்கு கொண்டு வந்திருக்கிறேன். 100-வது மன் கி பாத் நிகழ்ச்சிக்காக நீங்கள் அனைவரும் என்னை வாழ்த்தி இருக்கிறீர்கள்.
ஆனால், இதனை கேட்கும் அனைவரும், நம்முடைய நாட்டு மக்கள் என அவர்களே, பாராட்டப்பட தகுதியானவர்கள் ஆவர். மன் கி பாத் நிகழ்ச்சியானது லட்சக்கணக்கான இந்தியர்களின் மனதின் குரல் மற்றும் உணர்வுகளின் வெளிப்பாடு ஆகும்.
நமது குடிமக்களின் ஆளுமைக்கான நிகழ்ச்சியிது. இதில் நாம் நேர்மறையான விசயங்களை கொண்டாடுவதுடன், இந்நிகழ்ச்சியில் மக்களும் பங்கேற்கின்றனர் என கூறியுள்ள பிரதமர் மோடி, பிறரது சாதனைகளை கொண்டாடும் ஒரு வழி மற்றும் மற்றவர்களிடம் இருந்து கற்று கொள்ளும் ஒரு தருணமும் ஆகும் என்று அவர் கூறியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்ற பின்னர் முதன்முறையாக அக்டோபர் 3-ந்தேதி மன் கி பாத் என்ற நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் மூலம் மாதந்தோறும் கடைசி ஞாயிற்று கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார்.
2-வது முறையாக பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பின்னரும் இந்த நடைமுறை தொடர்ந்து வருகிறது. இந்நிகழ்ச்சியில் சமூக மற்றும் மக்கள் நலன் சார்ந்த பல்வேறு விவகாரங்கள் குறித்து அவர் பேசி வருகிறார்.
இதன்படி, பிரதமர் மோடியின் 100-வது மன் கி பாத் நிகழ்ச்சி இன்று ஒலிபரப்பு செய்யப்பட்டு உள்ளது. இந்த நிகழ்ச்சியை இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் ஒலிபரப்ப பா.ஜ.க. முழு அளவில் ஏற்பாடுகளை செய்திருந்தது.
இங்கிலாந்தில் 100-வது மன் கி பாத் நிகழ்ச்சியை நடத்த இந்திய சமூகத்தினர் ஏற்பாடு செய்து உள்ளனர். இதேபோன்று, அமெரிக்காவிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இந்த 100-வது மன் கி பாத் நிகழ்ச்சியானது ஐ.நா. சபையின் தலைமையகத்திலும் நேரலையாக ஒலிபரப்பு செய்யப்பட்டு உள்ளது.