கேரளா: இஸ்டாகிராமில் தனது புகைப்படத்திற்கு 'ஆர்ஐபி' என பதிவிட்டு இளைஞர் தூக்கிட்டு தற்கொலை
இன்ஸ்டாகிராமில் அஜ்மல் ஷெரிப்பை 14 ஆயிரம் பேர் பின்தொடர்கின்றனர்.
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் ஆலுவா பகுதியை சேர்ந்தவர் அஜ்மல் ஷெரிப் (வயது 28). இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கார், பைக் புகைப்படங்களை பதிவிட்டு பிரபலமடைந்தார். மேலும், தான் மேற்கொள்ளும் பயணங்கள் தொடர்பான புகைப்படங்களையும் பதிவிட்டு வந்தார். இன்ஸ்டாகிராமில் அஜ்மல் ஷெரிப்பை 14 ஆயிரம் பேர் பின்தொடர்கின்றனர்.
இந்நிலையில், அஜ்மல் ஷெரிப் நேற்று மாலை தனது வீட்டில் உள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்வதற்கு முன்பு அஜ்மல், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் புகைப்படத்தை பகிர்ந்து அதில் 'ஆர்ஐபி (RIP - Rest in Peace) அஜ்மல் ஷெரிப் 1995 - 2023' என பதிவிட்டுள்ளார்.
அஜ்மல் ஷெரிப் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், நல்ல வேலை கிடைக்காததால் அஜ்மல் ஷெரிப் மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாகவும், இதனால் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.