நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் துப்பாக்கியால் சுட்டு கொண்டாட்டம்; குண்டு பாய்ந்து இளைஞர் பலி
நிச்சயதார்த்த நிகழ்ச்சியின் போது துப்பாக்கியால் சுட்டு கொண்டாடியதில் குண்டு பாய்ந்து இளைஞர் பலியாகியுள்ளார்.
லக்னோ,
வட இந்தியாவில் துப்பாக்கி கலாசாரம் பெருமளவில் உள்ளது. குறிப்பாக ஏதேனும் கொண்டாட்ட நிகழ்ச்சிகளின் போது துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு கொண்டாட்டத்தில் ஈடுபடுவது வழக்கமாகும்.
இந்நிலையில், உத்தரபிரதேசத்தின் புலந்த்சாகர் மாவட்டம் பிபிநகரில் நேற்று திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சியின் போது விஷால் என்ற நபர் தான் வைத்திருந்த உரிமம்பெற்ற துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு ஆட்டம், பாட்டம் என கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.
துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டபோது தவறுதலாக நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த சரத் (வயது 24), ராஜ்குமார் ஆகிய 2 பேர் மீது குண்டு பாய்ந்தது. இதில், படுகாயமடைந்த 2 பேரும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சரத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்றொரு நபருக்கு தீவிர சிகிச்சை சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் துப்பாக்கியால் சுட்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டு இளைஞர் உயிரிழக்க காரணமான விஷாலை கைது செய்தனர்.