காதலியை நடுரோட்டில் 'ஸ்பேனரால்' அடித்துக்கொன்ற இளைஞர்; வேடிக்கை பார்த்த மக்கள் - அதிர்ச்சி வீடியோ

காதலியை நடுரோட்டில் வைத்து இளைஞர் ‘ஸ்பேனரால்’ அடுத்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2024-06-18 15:49 GMT

மும்பை,

மராட்டிய மாநிலம் பல்கார் மாவட்டம் நளசோப்ரா பகுதியை சேர்ந்த இளைஞர் ரோகித். இவரும் அதே பகுதியை சேர்ந்த ஆர்த்தி (வயது 20) என்ற இளம்பெண்ணும் 6 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். அதேபோல், இருவரும் பல்காரில் உள்ள தொழிற்பேட்டையில் வேலை செய்து வந்தனர்.

இதனிடையே, ஆர்த்தியின் நடத்தையில் ரோகித்திற்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதனால், இருவருக்கும் இடையே அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆர்த்தி இன்று காலை 8.30 மணியளவில் வேலைக்கு நடந்து சென்றுள்ளார். சின்சப்படா என்ற பகுதியில் சாலையில் அவர் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது, அங்கு மறைந்திருந்த ரோகித் தான் மறைத்து கொண்டு வந்த ஸ்பேனரை கொண்டு பின்னால் இருந்து வேகமாக வந்து ஆர்த்தியின் தலையில் பலமாக தாக்கினார்.

நடு ரோட்டில் வைத்து ஆர்த்தியின் தலையில் ஸ்பேனரை கொண்டு பயங்கரமாக தாக்கினார். ரோட்டில் மக்கள் அனைவரும் நடந்து சென்ற நிலையில் ஆர்த்தியை அவர் கடுமையாக தாக்கினார். தலையில் முதல் தாக்குதலிலேயே நிலைகுலைந்த ஆர்த்தி சுருண்டு விழுந்தார். ஆனாலும், ஆத்திரம் அடங்காத ரோகித் தனது காதலி ஆர்த்தியை 18 முறை ஸ்பேனரால் தலையில் அடித்தார். இந்த கொடூர தாக்குதலில் ஆர்த்தி ரத்த வெள்ளத்தில் விழுந்து உயிரிழந்தார். இந்த கொடூர கொலையை சுற்றி நின்ற பொதுமக்கள் வேடிக்கை பார்த்துள்ளனர். ஒரே ஒரு நபர் மட்டும் தாக்குதலை தடுக்க முயற்சித்துள்ளார். ஆனால், அந்த நபரை ரோகித் தாக்க முற்பட்டதால் அவரும் விலகிவிட்டார்.

ஆர்த்தியை நடுரோட்டில் அடித்துக்கொன்று உடலின் அருகிலேயே ரோகித் அமர்ந்திருந்தார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், ஆர்த்தி உடல் அருகே அமர்ந்திருந்த ரோகித்தை கைது செய்தனர். பின்னர், ஆர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதலி வெறொரு நபருடன் பழகுவதாக சந்தேகமடைந்த இளைஞர், நடுரோட்டில் பொதுமக்கள் முன்னிலையில் காதலியை ஸ்பேனரால் அடித்துக்கொன்ற சம்பவம் மராட்டியத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்