ஆர்டர் செய்தது 150 வந்தது 40; ரொட்டியால் ஏற்பட்ட தகராறு - பிறந்தநாளன்று 30 வயது நபர் அடித்துக்கொலை...!
150 ரொட்டிக்கு ஆர்டர் கொடுத்தபோது உணவகத்தில் இருந்து 40 ரொட்டி மட்டுமே அனுப்பப்பட்டுள்ளது.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் பரேலி மாவட்டம் ஷன்னிஹடா பகுதியை சேர்ந்த சன்னி நேற்று தனது 30-வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.
பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நேற்று இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளார். அப்பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் சன்னி 150 ரொட்டி ஆர்டர் செய்துள்ளார். அதற்கான பணத்தையும் அவர் முன்கூட்டியே செலுத்தியுள்ளார்.
ஆனால், ஓட்டலில் இருந்து வெறும் 40 ரொட்டிகள் மட்டுமே சன்னி வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இதையறிந்த சன்னி தனது உறவினர்களுடன் ஓட்டலுக்கு சென்று விளக்கம் கேட்டுள்ளார்.
அப்போது, ஓட்டல் உரிமையாளர் ஷூஷன் என்பருக்கும் சன்னிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ஷூஷன் ஓட்டல் ஊழியர்களுடன் சேர்ந்து சன்னி மற்றும் அவரது உறவினரை கட்டையால் கடுமையாக தாக்கியுள்ளனர்.
இதில் சன்னி ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தார். அவரது உறவினரும் படுகாயமடைந்தார்.
இதையடுத்து, அக்கம்பக்கத்தினர் சன்னி, அவரது உறவினரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால், படுகாயமடந்த சன்னி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து தாக்குதல் நடத்திய ஓட்டல் ஊழியர்களை கைது செய்தனர். தப்பியோடிய ஓட்டல் உரிமையாளர் ஷூஷனை தேடி வருகின்றனர்.
பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக ஆர்டர் கொடுத்ததற்கு குறைவாக ரொட்டி அனுப்பப்பட்டது குறித்து எழுந்த வாக்குவாதத்தில் 30 வயதான வாடிக்கையாளர் சன்னி ஓட்டல் உரிமையாளர், ஊழியர்களால் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.