கேரள டாக்டர் கொலை செய்யப்பட்ட அதே நாளில் மற்றொரு சம்பவம்... டாக்டர், நர்சுகளை தாக்கிய நபர்
கேரளாவில் மருத்துவ ஊழியர்கள் மீது ஒரே நாளில் இருவேறு தாக்குதல் சம்பவங்கள் நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.;
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கொட்டாரக்கரை தாலுகா மருத்துவமனையில், கடந்த 9-ந்தேதி இரவு பூயப்பள்ளி பகுதியில் வீட்டில் தகராறு செய்த சந்தீப் என்ற வாலிபரை போலீசார் அதிகாலை 4 மணியளவில் மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் சென்றனர்.
போதை மருந்துக்கு அடிமையாகி இருந்த சந்தீப் மருத்துவமனையில் ரகளையில் ஈடுபட்டு, அங்கிருந்த கத்திரிக்கோலை எடுத்து மருத்துவமனை ஊழியர்களை தாக்கி உள்ளார். இதில் 5 பேர் படுகாயம் அடைந்த நிலையில், டாக்டர் வந்தனா தாஸ் உடலில் 11 இடங்களில் கத்திரிக்கோலால் குத்தப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
கேரள மாநிலத்தை உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக கேரள ஐகோர்ட்டு தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு விசாரணையின் போது அரசையும், காவல்துறையையும் நீதிபதிகள் கடுமையாக விமர்சித்தனர்.
இந்த நிலையில், கொட்டாரக்கரை மருத்துவமனையில் டாக்டர் வந்தனா தாஸ் கொல்லப்பட்ட அதே நாளில், கேரளாவில் உள்ள நெடும்கண்டம் தாலுகாவில் இதே போன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்ததாக வெளியாகி இருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெடும்கண்டம் பகுதியைச் சேர்ந்த நவீன் என்ற நபரை போலீசார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது, வழக்குப்பதிவு செய்வது தொடர்பாக நவீன் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து நவீன் மருத்துவமனை ஊழியர்களை தாக்க தொடங்கியுள்ளார். உடனடியாக போலீசார் அங்கு வந்து நவீனை மடக்கிப் பிடித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் மருத்துவ ஊழியர்கள் மீது நவீன் தாக்குதல் நடத்திய போது போலீசார் உரிய பாதுகாப்பு அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஒரே நாளில் டாக்டர், நர்சுகள் மீது அரங்கேறிய இருவேறு தாக்குதல் சம்பவங்கள் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.