நிலுவையில் உள்ள நிதியை மத்திய அரசு விடுவிக்க கோரி தர்ணாவை தொடங்கினார் மம்தா பானர்ஜி
அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து தர்ணாவை மம்தா பானர்ஜி தொடங்கினார்.;
கொல்கத்தா,
மேற்கு வங்காளத்துக்கு மத்திய அரசு அளிக்கும் பல்வேறு நலத் திட்டங்களுக்கான நிதிகள் விடுவிக்கப்படாமல் நிலுவையில் இருப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் உள்ளிட்ட மத்திய அரசால் நடத்தப்படும் பல திட்டங்களுக்கு மாநிலத்தின் பாக்கிகள் 7,000 கோடி ரூபாய் என்று முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்தார். மேலும் இதற்கான நிதிகளை மத்திய அரசு வழங்க வேண்டும் எனவும் இல்லாவிட்டால் பிப்ரவரி 2-ம் தேதி (இன்று) தர்ணாவில் ஈடுபட உள்ளதாகவும் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்திருந்தார்.
இது குறித்து திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் , "கொல்கத்தா ரெட் ரோடு பகுதியில் உள்ள மைதானத்தில் இன்று மதியம் தர்ணா போராட்டம் தொடங்கும். எங்கள் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி போராட்டத்துக்கு தலைமை தாங்குவார். இதில் கட்சியின் பிற மூத்த தலைவர்களும் கலந்து கொள்வார்கள்" என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், மைதான பகுதியில் உள்ள பி.ஆர்.அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து தர்ணாவை முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தொடங்கினார். அவர் அவசர நிர்வாகத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக மேடைக்கு அருகில் ஒரு கூடாரம் போடப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளரும், முதல்-மந்திரியின் அண்ணன் மகனுமான அபிஷேக் பானர்ஜி, கட்சி எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், அமைச்சர்கள் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட தொழிலாளர்கள் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.