சந்தீப் கோஷுக்கு மம்தா பானர்ஜி எழுதிய கடிதம்... என்ன விவரம்? பா.ஜ.க. பரபரப்பு குற்றச்சாட்டு

கொல்கத்தாவில் ஆர்.ஜி. கார் மருத்துவமனையில் முதல்வராக சந்தீப் கோஷ் இருந்தபோது நடந்த பல்வேறு நிதி முறைகேடுகள் தொடர்பான விசாரணை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

Update: 2024-08-26 11:47 GMT

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பயிற்சி பெண் டாக்டர் ஒருவர், கடந்த 9-ந்தேதி அதிகாலையில் பலாத்காரம் செய்யப்பட்டு, பின்னர் கொடூர கொலை செய்யப்பட்டது நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவத்தில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார். அவரிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. கொல்கத்தா நகரில் உள்ள பிரெசிடென்சி சிறையில் வி.ஐ.பி. வார்டில் சஞ்சய் ராய் அடைக்கப்பட்டு உள்ளார். சி.பி.ஐ. அமைப்பினர் அவரிடம் உண்மை கண்டறியும் சோதனையை நேற்று நடத்தினர்.

இந்நிலையில், முன்னாள் முதல்வரான சந்தீப் கோஷுக்கு மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கடிதம் ஒன்றை எழுதிய விவரம் வெளிவந்து சர்ச்சையாகி உள்ளது. 2022, ஜூன் 30 என தேதியிடப்பட்ட அந்த கடிதத்தில் கோஷுக்கு அவர் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.

குறிப்பிட்ட சிலரை தேர்ந்தெடுத்து, அவர்களுடைய பிறந்த நாளில் மம்தா பானர்ஜி வாழ்த்து தெரிவிக்கும் வழக்கம் வைத்திருக்கிறார். அவர்களில் கோஷும் ஒருவர் ஆவார் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த விவகாரம் வெளிவந்ததும், எதிர்க்கட்சிகள் மம்தாவுக்கு எதிராக கடுமையான கண்டனங்களை வெளியிட்டு வருகின்றன.

இதுபற்றி பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரான பிரியங்கா திப்ரிவால் கூறும்போது, கண்காணிப்பு அறிக்கையை அடுத்து, ஆர்.ஜி. கார் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நடக்கும் முறைகேடுகள் பற்றி கண்டறிவதற்காக சிறப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டது. ஆனால், இந்த விவகாரத்தில் டாக்டர் சந்தீப் கோஷ் பதவியில் இருந்து நீக்கப்படவில்லை.

தொடர்ந்து பதவியை வகித்து வந்திருக்கிறார். இதுபோன்று கடித தொடர்பு உள்ள காரணத்தினால், கோஷ் பதவி நீக்கம் செய்யப்படவில்லை. அவர் கல்லூரியில் பதவியை தொடர்ந்துள்ளார் என குற்றச்சாட்டாக தெரிவித்து உள்ளார்.

இந்நிலையில், அந்த மருத்துவமனையில் உள்ள முன்னாள் முதல்வர் சந்தீப்பின் அலுவலகத்திலும், கல்லூரி வளாகத்தில் உள்ள உணவகத்திலும் சோதனை நடத்தப்பட்டது. சந்தீப் கோஷ் வீடு உள்பட மொத்தம் 15 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது என சி.பி.ஐ. அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேபோன்று, கேட்பாரற்ற சடலங்களை சட்ட விரோதமாக பயன்படுத்தியது, பயோமெடிக்கல் கழிவுகளை சட்டவிரோதமாக விற்பனை செய்தது, மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களை விநியோகிக்கும் நிறுவனங்களிடம் கமிஷன் பெற்றது போன்ற முறைகேடுகளில் ஈடுபட்டு உள்ளார் என புகார் எழுந்தது. இதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என மற்றொரு தகவல் வெளியாகி உள்ளது.

முதல்வராக சந்தீப் கோஷ் இருந்தபோது கல்லூரியில் நடந்த பல்வேறு நிதி முறைகேடுகள் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக்குழு நடத்தி வந்த விசாரணை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்