எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர் யார்? - மம்தா தலைமையில் ஆலோசனை

ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் களமிறக்கப்படும் வேட்பாளர் யார்? என்பது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.;

Update: 2022-06-15 11:33 GMT

 

புதுடெல்லி,

இந்திய ஜனாதிபதி தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் முடிவுகள் ஜூலை 21-ம் தேதி அறிவிக்கப்பட்டுகிறது.

இந்த தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொதுவேட்பாளரை நிறுத்த முயற்சிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக, எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் மேற்குவங்காள முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி ஈடுபட்டு வருகிறார்.

அந்த வகையில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக டெல்லியில் ஜூன் 15-ல் (இன்று) நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கும்படி 22 எதிர்க்கட்சிகள், பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களின் முதல்-மந்திரிகளுக்கும் மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்திருந்தார்.

இந்நிலையில், ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொதுவேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக மம்தா பானர்ஜி தலைமையில் இன்று டெல்லியில் ஆலோசனை கூட்டம் தொடங்கி நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திமுக உள்பட 16 கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த கூட்டத்தில் பாஜகவுக்கு எதிராக ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொதுவேட்பாளராக யாரை நிறுத்துவது என்பது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட்டது. தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் அல்லது மகாத்மா காந்தியின் பேரன் கோபாலகிருஷ்ண காந்தி இருவரில் ஒருவர் ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சி சார்பில் களமிறக்கப்படும் வேட்பாளராக இருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என சரத் பவார் ஏற்கனவே தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவாரா சரத் பவார்? - மம்தா சந்திப்பு

Tags:    

மேலும் செய்திகள்