ஜி20 விருந்து: மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அழைப்பு இல்லை
எதிர்க்கட்சி தலைவர்கள் யாருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை.;
புதுடெல்லி,
ஜி20 மாநாட்டையொட்டி இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு, தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு விருந்து அளிக்கிறார். இதற்காக ஜனாதிபதி மாளிகை அழைப்பு விடுத்து வருகிறது. ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
இன்று காலை தேவகவுடா, மன்மோகன் சிங் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது. தேவகவுடா உடல்நலத்தை காரணம் காட்டி பங்கேற்க இயலாது எனக் கூறிவிட்டார்.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இந்த தகவலை அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய எதிர்க்கட்சி தலைவர் கேபினெட் மந்திரிக்கு சமமானவர் எனவும் குறிப்பிட்டுள்ளது.
எதிர்க்கட்சி தலைவர்கள் யாருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை. அனைத்து கேபினெட் மந்திரிகள், மாநில முதல்-மந்திரிகள் ஆகியோர் அழைக்கப்படடுள்ளனர். இந்திய அரசின் அனைத்து செயலாளர்களும் அழைக்கப்பட்டுள்ளனர். மேலும் புகழ்பெற்றவர்கள் விருந்தினர் பட்டியலில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.