ஒற்றுமையுடன் தேர்தலை சந்தித்தால் காங்கிரஸ் ஆட்சி அமைப்பது உறுதி; மல்லிகார்ஜுன கார்கே பேச்சு

நாம் ஒற்றுமையாக இருந்து தேர்தலை சந்தித்தால் கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைப்பது உறுதி என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

Update: 2022-12-10 22:09 GMT

பெங்களூரு:

நாம் ஒற்றுமையாக இருந்து தேர்தலை சந்தித்தால் கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைப்பது உறுதி என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

உற்சாக வரவேற்பு

அகில இந்திய காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் தலைவரான பின்பு கடந்த மாதம் (நவம்பர்) பெங்களூருவுக்கு வந்த போது கர்நாடக காங்கிரஸ் கட்சி சார்பில் உற்சாக வரவேற்பும், அரண்மனை மைதானத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டமும் நடத்தப்பட்டு இருந்தது. அந்த சந்தர்ப்பத்தில் மல்லிகார்ஜுன கார்கே தனது சொந்த ஊரான கலபுரகிக்கு செல்லவில்லை. இந்த நிலையில், அகில இந்திய காங்கிரஸ் தலைவராக பதவி ஏற்ற பின்பு நேற்று முதல் முறையாக தனது சொந்த ஊரான கலபுரகிக்கு மல்லிகார்ஜுன கார்கே வருகை தந்தார். கலபுரகியில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

மல்லிகார்ஜுன கார்கேவை, கர்நாடக மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா, மாநில தலைவர் டி.கே.சிவக்குமார், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா உள்ளிட்ட தலைவர்கள் வரவேற்றனர். பின்னர் திறந்த வாகனத்தில் மல்லிகார்ஜுன கார்கே அழைத்து செல்லப்பட்டார். வழி நெடுகிழியிலும் காங்கிரஸ் தொண்டர்கள் திரண்டு நின்று கோஷங்களை எழுப்பினார்கள். பின்னர் நடந்த பொதுக்கூட்டத்தில் மல்லிகார்ஜுன கார்கே கலந்துகொண்டு பேசியதாவது:-

10 முக்கிய திட்டங்கள்

கல்யாண கர்நாடக மாவட்டங்களின் வளர்ச்சிக்காக 10 முக்கிய திட்டங்களை காங்கிரஸ் கட்சி கொண்டு வந்துள்ளது. அதன்படி, இந்த மாவட்டங்களின் வளர்ச்சிக்காக ஆண்டுக்கு ரூ.5 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படும். ஒரு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு, நீர்ப்பாசன திட்டங்கள், பெண்களுக்காக தனியாக கல்லூரி திறப்பு உள்பட 10 முக்கிய திட்டங்களை கொண்டு வந்து காங்கிரஸ் செயல்படுத்தும்.

கல்யாண கர்நாடக மாவட்டங்களின் வளர்ச்சிக்காக ரூ.1,500 கோடி ஒதுக்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்தார். அந்த ரூ.1,500 கோடி நிதியை மற்ற மாவட்டங்களுக்கும், பிற துறைகளின் வளர்ச்சிக்காகவும் பசவராஜ் பொம்மை ஒதுக்கினார். அப்படி இருக்கும் பட்சத்தில் இந்த பகுதியில் உள்ள மாவட்டங்கள் எப்படி வளர்ச்சி அடையும்.

ஒற்றுமையாக இருந்து உழைத்தால்...

இமாசல பிரதேச மாநிலத்தில் நடந்த தேர்தலில் காங்கிரஸ் அபார வெற்றி பெற்றுள்ளது. அதுபோல், கர்நாடகத்திலும் காங்கிரஸ் வெற்றி பெற வேண்டும். அகில இந்திய காங்கிரஸ் தலைவராக கர்நாடகத்தை சேர்ந்த நான் இருந்து வருகிறேன். எனக்கு பெருமை சேர்த்து கொடுக்கும் விதமாக கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்று மக்களிடம் கேட்டுக் கொள்கிறேன்.

கர்நாடக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட பல பா.ஜனதா தலைவர்கள் தீவிரமாக இருப்பார்கள். அவர்களை போன்று நம்முடைய தலைவர்களும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டும். நாம் ஒற்றுமையாக இருந்து உழைத்தாலே கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வருவது உறுதி.

முதல்-மந்திரி யார்?

எனவே தலைவர்கள் ஒற்றுமையாக இருந்து சட்டசபை தேர்தலில் வெற்றிக்காக உழைக்க வேண்ம். நாம் ஒற்றுமையாக இல்லாமல் சட்டசபை தேர்தலை சந்தித்தால், அது மக்களுக்கு செய்யும் துரோகம் ஆகும். எனக்கு வேண்டியவர்கள், வேண்டாதவர்கள் யாரும் இல்லை.

அடுத்த முதல்-மந்திரி யார்? என்பதை காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்யும். அதுபோல், மந்திரிசபையில் யார்? இருக்க வேண்டும் என்பதையும் மேலிடம் தீர்மானிக்கும். காங்கிரசின் வெற்றிக்காக ஒவ்வொருவரும் கடினமாக உழைக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்