ஹமாஸ் அமைப்பு குறித்த கேள்வி-பதில்.. குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த வெளியுறவுத்துறை
ஹமாஸ் தொடர்பான கேள்வி மற்றும் பதிலுடன் நான் எந்த பேப்பரிலும் கையெழுத்திடவில்லை என வெளியுறவுத் துறை இணை மந்திரி மீனாட்சி லேகி கூறினார்.
புதுடெல்லி:
ஹமாஸ் அமைப்பை பயங்கரவாத அமைப்பு என அறிவிக்க வேண்டும் என இஸ்ரேல் உலக நாடுகளை வற்புறுத்தி வருகின்றன. இஸ்ரேலுக்கு துணை நிற்பதாக இந்திய பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர், இந்தியா ஹமாஸை பயங்கரவாத அமைப்பு என அறிவிக்க வேண்டும் என நேரடியாக வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்த நிலையில் ஹமாஸ் அமைப்பை பயங்கரவாத அமைப்பு என அறிவிக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி மீனாட்சி லேகி எழுத்துப்பூர்வமாக பதில் அளித்ததாக கூறி கடிதம் ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த கடிதத்தை மேற்கோள்காட்டி, இந்தியாவில் ஹமாஸ் அமைப்பை தடை செய்யும் முன்மொழிவு ஏதேனும் உள்ளதா? என ஒருவர் மீனாட்சி லேகியை டேக் செய்து கேட்டிருந்தார். இதற்கு பதில் அளித்த மீனாட்சி லேகி, "உங்களுக்கு தவறாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கேள்வி மற்றும் பதிலுடன் நான் எந்த பேப்பரிலும் கையெழுத்திடவில்லை" என வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் மற்றும் பிரதமர் அலுவலகத்தை டேக் செய்து பதில் அளித்தார்.
இந்த குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி விளக்கம் அளித்துள்ளார். மக்களவையில் ஹமாஸ் அமைப்பு தொடர்பான கேள்விக்கு பதிலளித்த மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி வி.முரளீதரனின் பெயரை குறிப்பிட்டு தொழில்நுட்ப திருத்தம் மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்தார்.