மகரவிளக்கு தரிசனம்; சபரிமலையில் வரும் 10-ந்தேதியுடன் ஸ்பாட் புக்கிங் சேவை நிறுத்தம்
கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த பல்வேறு ஏற்பாடுகளை திருவிதாங்கூர் தேவஸ்தானம் செய்து வருகிறது.;
சபரிமலை,
சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல, மகர விளக்கு பூஜை மிகவும் புகழ் பெற்றவை. இதற்காக ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் 1-ந்தேதி முதல் 60 நாட்கள் நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். அந்த நாட்களில் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டி விரதம் இருந்து சபரிமலைக்கு வந்து ஐயப்பனை தரிசனம் செய்வார்கள்.
அதன்படி மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த நவம்பர் மாதம் 16-ந்தேதி திறக்கப்பட்டது. இதனை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து சாமி தரிசனம் செய்தனர். 41 நாட்கள் நடைபெறும் வருடாந்திர மண்டல பூஜை நிறைவடைந்ததை தொடர்ந்து கடந்த 27-ந் தேதி இரவு 10 மணிக்கு சிறப்பு பூஜைகளுடன் நடை சாத்தப்பட்டது.
இந்த நிலையில் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை கோவில் நடை கடந்த 30-ந்தேதி மீண்டும் திறக்கப்பட்டது. சபரிமலை தந்திரி கண்டரரு மகேஷ் கோகனரு தலைமையில் மேல் சாந்தி முரளி நடையை திறந்தார். மகர விளக்கின் முத்தாய்ப்பு நிகழ்ச்சியாக வரும் 15-ந்தேதி மகரஜோதி தரிசனம் நடைபெற உள்ளது.
மண்டல பூஜை சமயத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியதை போன்று மகரவிளக்கு பூஜைக்கும் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அதற்கான ஏற்பாடுகளை திருவிதாங்கூர் தேவஸ்தானம் செய்து வருகிறது.
அதன் ஒருபகுதியாக ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு குறைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஜனவரி 15-ந்தேதி வரை ஆன்லைன் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளதாகவும், தினமும் 80 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படும் ஜனவரி 14 மற்றும் 15-ந்தேதிகளில் ஆன்லைன் முன்பதிவு 50 ஆயிரமாகவும் ஸ்பாட் புக்கிங் 10 ஆயிரமாகவும் சுறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஸ்பாட் புக்கிங் சேவை வரும் 10-ந்தேதியுடன் நிறுத்தப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. மண்டல பூஜை நிறைவடைந்த பின்னர் 20-ந்தேதி காலை 7 மணிக்கு மீண்டும் நடை சாத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.