நீர்நிலைகள் வறண்டதால் மக்காச்சோள பயிர்கள் கருகும் அபாயம்
குடகில் சுட்டெரிக்கும் வெயிலால் நீர்நிலைகள் வறண்டதுடன், மக்காச்சோள பயிர்கள் கருகும் அபாயத்தில் உள்ளதால் மாநில அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.;
குடகு:-
வெயில் வாட்டி வதைப்பு
கர்நாடகத்தில் உள்ள மலைநாடு மாவட்டங்களில் குடகும் ஒன்று. இந்த குடகு மாவட்டம் எப்போதும் குளிர்ச்சியான பகுதியாக காணப்படும். குறிப்பாக ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் மழை அதிகமாக பெய்யும். இதனால் குடகில் இந்த காலக்கட்டத்தில் குளிர் அதிகமாக இருக்கும். மக்கள் நெருப்பை பற்ற வைத்துதான் குளிர் காய்வார்கள். ஆனால் இந்த ஆண்டு அது தலை
கீழாக மாறிவிட்டது. கடும் வெயில் வாட்டி வதைக்கிறது. மழை பொய்த்து போனதால் குளங்கள், ஏரிகள் போன்ற நீர் நிலைகள் வறண்டு வருகிறது. பாகமண்டலாவில் வழக்கமாக வரக்கூடிய தண்ணீர் இந்த முறை குறைந்துவிட்டது. இதனால் குடகில் உள்ள மக்கள் குடிப்பதற்கு தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என்று கூறப்படுகிறது. அதேபோல விளை பயிர்களும் நீர் இல்லாமல் கருகி வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். குறிப்பாக குடகு மாவட்டம் பசவனஹள்ளி, குட்டேஹோசூர், பாலடுக்கா, ஆத்தூர், கோடி பசவனஹள்ளி, பெட்டகேரி, ஒசகாடு ஆகிய இடங்களில் விவசாயிகள் மக்காச்சோளம் சாகுபடி செய்துள்ளனர்.
மக்காச்சோளம் கருகும் அபாயம்
மழை இல்லையென்றால் மக்காச்சோளம் விளையாது. தற்போது அறுவடை நேரம் நெருங்கி இருக்கிறது. ஆனால் மழை இல்லாததால் மக்காச்சோளம் விளையாமல், பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல காபி, மிளகு செடிகள் தண்ணீர் இல்லாமல் கருகிவிட்டதாக விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். விவசாயிகள் சொட்டு நீர் பாசனம் செய்து சாகுபடி செய்ய முயற்சித்தனர். ஆனால் நீர்நிலைகள் வறண்டதால், அந்த முயற்சியும் தோல்வியடைந்துவிட்டது. இதனால் குடகை வறட்சி மாவட்டமாக அறிவிக்கவேண்டும் என்று விவசாயிகள் மாநில அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். ஏற்கனவே மாவட்ட பொறுப்பு மந்திரி என்.எஸ்.போசராஜு ஆய்வு ெசய்து, வறட்சியடைந்த தாலுகாக்களை ஆய்வு செய்யும்படி உத்தரவிட்டுள்ளார். அதன்படி ஆய்வு பணிகள் நடந்து வருகிறது. இந்தநிைலயில் ஆய்வு பணிகளை துரிதமாக முடிக்கும்படி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.