காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை; ரூபா கலா சசிதர் எம்.எல்.ஏ. பங்கேற்பு

காந்தி ஜெயந்தியையொட்டி ராபர்ட்சன்பேட்டையில் உள்ள காந்தி சிலைக்கு ரூபா கலா சசிதர் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Update: 2023-10-02 22:05 GMT

கோலார் தங்கவயல்:

காந்தி ஜெயந்தியையொட்டி ராபர்ட்சன்பேட்டையில் உள்ள காந்தி சிலைக்கு ரூபா கலா சசிதர் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

காந்தி ஜெயந்தி

கோலார் மாவட்டம் கோலார் தங்கவயலில், காந்தி ஜெயந்தியையொட்டி காங்கிரஸ் கட்சி சார்பில் ரூபா கலா சசிதர் எம்.எல்.ஏ. முன்னிலையில் ராபர்ட்சன்பேட்டையில் உள்ள மகாத்மா காந்தியின் உருவச்சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி ந்டந்தது. இதில் ரூபா கலா சசிதர் எம்.எல்.ஏ., நகரசபை கமிஷனர் பவன் குமார் மற்றும் அரசு அதிகாரிகள், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டு மகாத்மா காந்தியின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதைத்தொடர்ந்து எம்.எல்.ஏ. ரூபா கலா சசிதர், கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் மற்றும் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

காமராஜர் சிலை

அதை தொடர்ந்து பெருந்தலைவர் காமராஜரின் நினைவு நாளை முன்னிட்டு ரூபா கலா சசிதர் எம்.எல்.ஏ., காமராஜ் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் பா.ஜனதா, ஜனதா தளம்(எஸ்) கட்சிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் அக்கட்சிகளில் இருந்து விலகி கோலார் தங்கவயல் ஜனதா தளம்(எஸ்) கட்சியின் முன்னாள் தலைவர் கோபால் தலைமையில், ரூபா கலா சசிதர் எம்.எல்.ஏ. முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். அவர்களில் முன்னாள் கவுன்சிலர் சவுந்தர் உள்ளிட்டோர் முக்கிய நபர்கள் ஆவார்கள். பின்னர் ரூபா கலா சசிதர் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

நம்பிக்கை

தற்போது காங்கிரஸ் கட்சியில் சேர்ந்திருப்பவர்கள் எனது சேவையை பாராட்டி சேர்ந்துள்ளார்கள். காங்கிரஸ் கட்சியின் நம்பிக்கை மீது இவர்கள் வைத்துள்ள நம்பிக்கை வரவேற்கத்தக்கது. கோபால் தலைமையில் ஏராளமானோர் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளனர். இவர்கள் கட்சியில் சேர்ந்தது காங்கிரஸ் கட்சிக்கு மேலும் சக்தியை அதிகரித்துள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக ராபர்ட்சன்பேட்டையில் உள்ள மகாத்மா காந்தி மார்க்கெட்டிற்கும் ரூபா கலா சசிதர் எம்.எல்.ஏ. சென்றார். அப்போது அவர் மகாத்மா காந்தியின் தூய்மை பாரதம் குறித்து பேசினார். மார்க்கெட்டில் எங்கும் குப்பை கழிவுகள் சேராதவாறு வியாபாரிகள் பார்த்துக் கொள்ள வேண்டும், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும், பொது இடங்களில் யாரும் குப்பைகளை கொட்டக்கூடாது, பாலிதீன் பைகள் பயன்பாட்டை முழுவதுமாக கைவிட வேண்டும் என்று கூறி அறிவுரை வழங்கினார்.

பிளாஸ்டிக் வாளிகள்

மேலும் ஒவ்வொரு கடைக்கும் பிளாஸ்டிக் வாளி தரப்படும் என்றும், அதில் குப்பை கழிவுகளை சேகரித்து நகரசபை தூய்மை பணியாளர்களிடம் தரம் பிரித்து கொடுத்துவிட வேண்டும் என்று கூறினார். அதுமட்டுமின்றி ஒவ்வொரு மார்க்கெட்டில் உள்ள ஒவ்வொரு கடைக்கும் தலா 3 பிளாஸ்டிக் வாளிகளை கொடுத்தார். இதில் கவுன்சிலர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்