மராட்டியத்தில் சுங்க சாவடியை அடித்து நொறுக்கிய நவநிர்மாண் சேனா கட்சியினர்- வைரலாகும் வீடியோ

அமித் தாக்கரே காரை நிறுத்தி வைத்த ஆத்திரத்தில் நாசிக்கில் சுங்க சாவடியை நவநிர்மாண் சேனா கட்சியினர் சூறையாடினர்.;

Update: 2023-07-23 11:04 GMT

மும்பை,

அமித் தாக்கரே காரை நிறுத்தி வைத்த ஆத்திரத்தில் நாசிக்கில் சுங்க சாவடியை நவநிர்மாண் சேனா கட்சியினர் சூறையாடினர்.

நவநிர்மாண் சேனா கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே மகன் அமித் தாக்கரே நேற்று இரவு நாசிக்கில் இருந்து மும்பை வந்தார். அவர் இரவு 9.15 மணியளவில் நாசிக் சின்னார், கோண்டே பகுதியில் உள்ள சுங்கசாவடிக்கு வந்தார். அப்போது அவரது கார் பாஸ்ட்டேக் விவரங்கள் தவறாக இருந்ததாக தெரிகிறது. இதன் காரணமாக அவர் சுங்க சாவடியில் சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் நவநிர்மாண் சேனா கட்சியினர் அந்த சுங்க சாவடிக்கு வந்தனர். அவர்கள் அமித் தாக்கரே வாகனத்தை நிறுத்தி வைத்திருந்த ஆத்திரத்தில் சுங்க சாவடியை அடித்து நொறுக்கினர். மேலும் அமித் தாக்கரே வாகனத்தை நிறுத்தியதற்காக சுங்கசாவடி ஊழியர்களை மன்னிப்பு கேட்க வைத்தனர். நவநிர்மாண் சேனாவினர் சுங்க சாவடியை அடித்து நொறுக்கும் வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

சம்பவம் குறித்து வாவி போலீஸ் அதிகாரி கூறுகையில், " சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம். கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த பிறகு நடவடிக்கை எடுக்கப்படும். இதுவரை சம்பவம் தொடர்பாக எங்களுக்கு புகார் எதுவும் வரவில்லை. எனினும் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய உள்ளோம். " என்றார்.


Tags:    

மேலும் செய்திகள்