இலவசமாக வாழைப்பழம் கேட்ட இளைஞர்... தராததால் ஆத்திரத்தில் மாற்றுத்திறனாளி வியாபாரியை தாக்கிய கொடூரம்
வாழைப்பழங்களை இலவசமாக தர மறுத்ததால், மாற்றுத்திறனாளி பழ வியாபாரியை இளைஞர் ஒருவர் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.;
பயந்தர்,
மராட்டிய மாநிலம் பயந்தரில், வாழைப்பழங்களை இலவசமாக தர மறுத்ததால், மாற்றுத்திறனாளி பழ வியாபாரியை இளைஞர் ஒருவர் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
பயந்தரில் உள்ள தாக்கூர் காலிக்கு வெளியே தள்ளுவண்டியில் வைத்து மாற்றுத்திறனாளி பழ வியாபாரி ஒருவர் வாழைப்பழங்களை விற்றுக் கொண்டிருந்தார், அப்போது இளைஞர் ஒருவர் நான்கு வாழைப்பழங்களை இலவசமாக தரும்படி அவரிடம் கேட்டுள்ளார். அதற்கு அந்த வியாபாரி மறுத்துவிட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த இளைஞர், வியாபாரியை அடித்து உதைத்து பலவந்தமாக தரையில் தள்ளினார். இதில் பழ வியாபாரிக்கு சிறிய காயம் ஏற்பட்டது. இதையடுத்து, சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அந்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.