ரூ.100 கோடி மாமூல் வழக்கில் அனில் தேஷ்முக்கிற்கு ஜாமீன் வழங்க சி.பி.ஐ. கோர்ட்டு மறுப்பு
ரூ.100 கோடி மாமூல் வழக்கில் முன்னாள் மந்திரி அனில் தேஷ்முக்கிற்கு ஜாமீன் வழங்க மும்பை சி.பி.ஐ. கோர்ட்டு மறுத்து விட்டது.;
மாமூல் வழக்கு
மராட்டியத்தில் உத்தவ் தாக்கரே ஆட்சியின் போது உள்துறை மந்திரியாக இருந்தவர் அனில் தேஷ்முக்(வயது71). தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான இவர், போலீசாரை மாதம் ரூ.100 கோடி மாமூல் வசூலித்து தரும்படி கட்டாயப்படுத்தியதாக மும்பை நகர முன்னாள் போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங் குற்றம்சாட்டினார்.
இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரிக்க மும்பை ஐகோர்ட்டு உத்தரவிட்டதை அடுத்து, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மந்திரி பதவியில் இருந்து விலகினார்.
ஜாமீன் மறுப்பு
இந்த வழக்கில் கடந்த ஆண்டு நவம்பரில் கைதான அவர் சுமார் ஒரு ஆண்டு காலமாக சிறையில் உள்ளார். இந்த நிலையில் ஜாமீன் கேட்டு மும்பை சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் தாக்கல் செய்த மனு மீது விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அப்போது அவருக்கு ஜாமீன் வழங்க மறுத்த சி.பி.ஐ. கோர்ட்டு அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதற்கிடையே சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான அமலாக்கத்துறை வழக்கில் அனில் தேஷ்முக்கிற்கு கடந்த 4-ந் தேதி மும்பை ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கி இருந்தது. இதையடுத்து தான் அவர் ஊழல் வழக்கில் ஜாமீன் கேட்டு சி.பி.ஐ. கோர்ட்டை நாடியது குறிப்பிடத்தக்கது.