மராட்டிய மாநிலம் புல்தானாவில் நடந்த பஸ் விபத்தில் 25 பயணிகள் உடல் கருகி பலி

புனே வந்த தனியார் சொகுசு பஸ் தீப்பிடித்து எரிந்த பயங்கர விபத்தில் 25 பயணிகள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

Update: 2023-07-02 00:24 GMT

நாக்பூரில் இருந்து நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு தனியார் டிராவல்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ஏ.சி. சொகுசு பஸ் புனே நோக்கி புறப்பட்டது.

தனியார் சொகுசு பஸ்

பஸ்சில் பயணிகள், டிரைவர், நடத்துனர் என 33 பேர் இருந்தனர். யவத்மால் மாவட்டம் கனஞ்சாவில் பஸ் இரவு உணவுக்காக நிறுத்தப்பட்டது. பின்னர் அந்த பஸ் மீண்டும் தனது பயணத்தை தொடங்கியது. இது படுக்கை வசதி கொண்ட பஸ் ஆகும். பயணிகள் கண் அயர்ந்தனர். நேற்று அதிகாலை 1.30 மணியளவில் பஸ் புல்தானா மாவட்டம் சிந்த்கேட்ராஜா அருகே உள்ள பிம்பல்குடே கிராமப்பகுதியில் நாக்பூர் - மும்பை சம்ருத்தி விரைவு சாலையில் சென்றது. அப்போது திடீரென பஸ், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. தறிகெட்டு ஓடிய பஸ் சாலையில் இருந்த கம்பத்தில் உரசி, தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது. அயர்ந்து தூங்கி கொண்டு இருந்த பயணிகள் திடுக்கிட்டனர். பலர் பஸ்சுக்குள் தூக்கி வீசப்பட்டனர்.

தீப்பிடித்து எரிந்தது

எனினும் அவர்கள் சுதாரிப்பதற்குள் பஸ் தீப்பிடித்தது. தீ மள, மளவென பரவத் தொடங்கியது. பஸ் கவிழ்ந்ததில் கதவு பகுதிகள் கீழ் நோக்கி இருந்ததால், பயணிகளால் வெளியேற முடியவில்லை. சில பயணிகள் பஸ்சின் பின் பக்க கண்ணாடியை உடைத்தும், ஜன்னல் கண்ணாடியை உடைத்தும் வெளியேறினர். இவ்வாறு டிரைவர், நடத்துனர் உள்பட 8 பேர் காயத்துடன் உயிர் தப்பினர். சிறிது நேரத்திலேயே பஸ்சில் தீ கொழுந்துவிட்டு எரிந்ததால் மற்ற பயணிகளால் வெளியேற முடியவில்லை. அவர்கள் புழுவை போல தீயில் சிக்கி கருகினர். துடி, துடிக்க உயிருடன் எரிந்தனர்.

25 பேர் கருகி சாவு

தகவல் அறிந்து போலீசார், தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் போராடி பஸ்சில் எரிந்த தீயை அணைத்தனர். எனினும் பஸ்சில் இருந்த 25 பயணிகள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். கரிக்கட்டையாகி கிடந்த அவர்களது உடல்கள் மீட்கப்பட்டன. இதனால் உடல்களை அடையாளம் காண முடியாமல் உறவினர்கள் தவித்து வருகின்றனர்.

விபத்து குறித்து புல்தானா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுனில் கடஸ்னே கூறுகையில், " பஸ்சில் 33 பயணிகள் இருந்தனர். அதில் 25 பேர் உடல் கருகி உயிரிழந்து விட்டனர். மற்ற 8 பேரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்" என்றார்.

டயர் வெடித்ததால் விபத்து நடந்ததாக உயிர் தப்பிய டிரைவர் கூறினார். பஸ் சாலை தடுப்பு சுவரில் மோதிய வேகத்தில் டீசல் டேங்கர் வெடித்து தீப்பிடித்து எரிந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

டி.என்.ஏ. சோதனை

இந்தநிலையில் விபத்து குறித்து தகவல் அறிந்த முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்கள் விபத்து நடந்த பகுதியை ஆய்வு செய்தனர். ஆய்வுக்கு பிறகு முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டு இருப்பதாக கூறினார். மேலும் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்தார்.

துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில், " விபத்தில் பலியானவர்கள் உடல் அடையாளம் காண முடியாத அளவுக்கு கருகி உள்ளது. உடல்களை அடையாளம் காண டி.என்.ஏ. சோதனை செய்யப்படும் " என்றார்.

ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்

பஸ் தீப்பிடித்து எரிந்து 25 பயணிகள் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விபத்து குறித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "மராட்டிய மாநிலம் புல்தானாவில் நடந்த பஸ் விபத்து மிகுந்த வேதனை அளிக்கிறது. விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்காக பிரார்த்தனை செய்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணம்பெற வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு மாநில அரசு அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது. விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும்" என்று கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்