மண்டியா திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா; நாளை தொடங்குகிறது

மண்டியா கே.ஆர்.பேட்டை திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா வருகிற 13-ந் தேதி (நாளை) தொடங்குவதாக மந்திரி கோபாலய்யா கூறினார்.

Update: 2022-10-11 21:24 GMT

பெங்களூரு:

கலால்துறை மந்திரி கோபாலய்யா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

மகா கும்பமேளா

மண்டியா மாவட்டம் கே.ஆர்.பேட்டை தாலுகாவில் உள்ள திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா வருகிற 13-ந் தேதி தொடங்கி 16-ந் தேதி வரை நடக்கிறது. இதில் நாடு முழுவதும் இருந்து 300-க்கும் மேற்பட்ட மடாதிபதிகள், 6 லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். 3 ஜோதி ரதங்கள், நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

14-ந் தேதி மகா கும்பமேளாவை தர்மஸ்தலா மஞ்சுநாத கோவில் தலைவர் வீரேந்திர ஹெக்டே எம்.பி. தொடங்கி வைக்கிறார். இதில் ஆதிசுஞ்சனகிரி நிர்மலானந்தநாத சுவாமி உள்பட பல்வேறு மடாதிபதிகள் கலந்து கொள்கிறார்கள். இந்த கும்பமேளாவை முன்னிட்டு மடாதிபதிகள் மாநாடு 15-ந் தேதி நடக்கிறது. இந்த மாநாட்டை உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தொடங்கி வைக்கிறார்.

புனித நீராடல் நிகழ்ச்சி

இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையும் கலந்து கொள்கிறார்கள். முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா கொடி ஏற்றுகிறார். இதில் மத்திய-மாநில மந்திரிகள் பலர் கலந்து கொள்ள உள்ளனர். அன்றயை தினம் காலை 9.30 மணிக்கு புனித நீராடல் நிகழ்ச்சி நடக்கிறது. அந்த சங்கமம் பகுதியில் மலை மாதேஸ்வரா கோவில் அமைக்கப்பட்டுள்ளது. அந்த கோவிலும் திறக்கப்பட உள்ளது.

மலை மாதேஸ்வரா மலையில் இருந்து 3 ஜோதிகள் புறப்பட்டு வந்து கொண்டிருக்கின்றன. இந்த கும்பமேளாவுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. பக்தர்களின் வசதிக்காக 200-க்கும் மேற்பட்ட தற்காலிக கழிவறை வசதிகள் செய்யப்பட்டு இருக்கின்றன.

இவ்வாறு கோபாலய்யா கூறினார்.

இந்த பேட்டியின்போது இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை மந்திரி நாராயணகவுடா உடன் இருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்