அசாம் வெள்ளத்தில் தத்தளிக்கிறது; மராட்டிய மாநில அரசை கவிழ்ப்பதில் பாஜக மும்முரம் - திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு
சிவசேனா கட்சி எம்.எல்.ஏ.க்கள் பாஜக ஆளும் அசாமில் சென்று தங்கியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கவுகாத்தி,
சிவசேனா கட்சியைச் சேர்ந்த பொதுப்பணித்துறை மந்திரி ஏக்னாத் ஷிண்டே தலைமையில் 46 எம்.எல்.ஏ.க்கள் சிவசேனா கூட்டணி அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். இவர்கள் தற்போது அசாம் மாநிலம் கவுகாத்தியில் தங்கியுள்ளனர்.
அசாமில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.பிரம்மபுத்திரா மற்றும் பராக் ஆறுகள் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை அடுத்து 32 மாவட்டங்கள் வெள்ளத்தில்மூழ்கின. இதில் 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 55 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சிவசேனா கட்சி எம்.எல்.ஏ.க்கள் பாஜக ஆளும் அசாமில் சென்று தங்கியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடயே, ஏக்நாத் ஷிண்டேவின் முகாமைச் சேர்ந்த மராட்டிய மாநில அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தங்கியுள்ள கவுகாத்தியில் உள்ள ராடிசன் ப்ளூ ஓட்டலுக்கு வெளியே திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம நடைபெற்றது.
அசாமில் ஏற்பட்டுள்ள கனமழை வெள்ளத்திற்கு மத்தியில், மராட்டிய எம்.எல்.ஏ.க்களை பாஜக விற்பனை செய்வதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டினர். போராட்டத்திற்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் ரிபுன் போரா தலைமை தாங்கினார்.
இதனை தொடர்ந்து, கவுகாத்தியில் பாஜகவுக்கு எதிராக போராட்டம் நடத்திய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
அசாமில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்தில் மக்கள் இறக்கும் போது, மராட்டியத்தில் இருந்து வந்துள்ள அதிருப்தியாளர்களுக்கு வசதி செய்து கொடுப்பதாக அசாம் முதல்-மந்திரி ஹோமந்தா பிஸ்வா சர்மா மீது போரா குற்றம்சாட்டினார்.
அசாமில் சுமார் 20 லட்சம் பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், மராட்டிய அரசை கவிழ்ப்பதில் பாஜக முதல் மந்திரி மும்முரமாக உள்ளார் என்று திரிணாமுல் காங்கிரஸ் குற்றம்சாட்டியது.