மராட்டிய இடைத்தேர்தலில் கஸ்பா பேத் சட்டசபை தொகுதியை காங்கிரசிடம் பறி கொடுத்தது, பா.ஜனதா

மராட்டிய சட்டசபை இடைத்தேர்தல் முடிவில் கஸ்பா பேத் தொகுதியில் பா.ஜனதா அதிர்ச்சி தோல்வி அடைந்தது. சிஞ்ச்வாட் தொகுதியை அந்த கட்சி மீண்டும் தக்க வைத்துள்ளது.;

Update: 2023-03-02 23:15 GMT

மராட்டிய சட்டசபைக்கு புனே நகரில் உள்ள கஸ்பா பேத், சிஞ்ச்வாட் தொகுதிகளுக்கு கடந்த 26-ந் தேதி இடைத்தேர்தல் நடந்தது.

மறைந்த எம்.எல்.ஏ.வின் மனைவி

கஸ்பா பேத் தொகுதியில் முக்தா திலக், சிஞ்ச்வாட் தொகுதியில் லட்சுமண் ஜக்தாப் ஆகிய பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் மரணத்தை தொடர்ந்து இந்த இடைத்தேர்தலுக்கு அவசியம் ஏற்பட்டது. இந்த இரு தொகுதிகளிலும் பா.ஜனதா வேட்பாளரை களம் இறக்கியது. சிஞ்ச்வாட் தொகுதியில் மறைந்த எம்.எல்.ஏ. லட்சுமண் ஜக்தாப்பின் மனைவி அஸ்வினி ஜக்தாப் நிறுத்தப்பட்டார். ஆனால் கஸ்பா பேத் தொகுதியில் மறைந்த எம்.எல்.ஏ. முக்தா திலக்கின் குடும்ப உறுப்பினருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இங்கு ஹேமந்த் ரானசே வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.

பா.ஜனதாவுக்கு முதல்-மந்திரி ஷிண்டே தலைமையிலான சிவசேனா ஆதரவு அளித்தது.

எதிர்க்கட்சிகள் கூட்டணி

எதிர்க்கட்சிகளான மகாவிகாஸ் அகாடி கூட்டணி (தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ், உத்தவ் தாக்கரே சிவசேனா) சார்பில் கஸ்பாவில் காங்கிரசை சேர்ந்த ரவீந்திர தன்கேகரும், சிஞ்ச்வாட்டில் தேசியவாத காங்கிரசை சேர்ந்த நானா காதேவும் வேட்பாளர்களாக களம் இறக்கப்பட்டனர். மேலும் சிஞ்வாட்டில் உத்தவ் தாக்கரே சிவசேனாவை சேர்ந்த அதிருப்தி வேட்பாளரான ராகுல் காலதே சுயேச்சையாக போட்டியிட்டார்.

உத்தவ் தாக்கரே ஆட்சி கவிழ்ந்து ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான ஆட்சி மலர்ந்த பிறகு முதல் முறையாக நடைபெறும் தேர்தல் இதுவாகும். எனவே ஆளும் ஏக்நாத் ஷிண்டே- பா.ஜனதா மற்றும் மகாவிகாஸ் அகாடி கூட்டணிக்கு இடைத்தேர்தல் கவுரவப்பிரச்சினையாக பார்க்கப்பட்டது.

பா.ஜனதா அதிர்ச்சி தோல்வி

இந்தநிலையில் 2 தொகுதி தேர்தலிலும் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. கஸ்பா பேத் தொகுதியில் ஆரம்பம் முதலே காங்கிரஸ் வேட்பாளர் ரவீந்திர தன்கேகர் முன்னிலையில் இருந்தார். முடிவில் அவர் 73 ஆயிரத்து 194 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பா.ஜனதா வேட்பாளர் ஹேமந்த் ரானசே 62 ஆயிரத்து 244 ஓட்டுகள் பெற்று அதிர்ச்சி தோல்வியை தழுவினார். கஸ்பா பேத் தொகுதியில் காங்கிரஸ்-பா.ஜனதா இடையே நேரடி போட்டி நிலவியது. அங்கு மற்ற வேட்பாளர்கள் சொர்பமான வாக்குகளை மட்டுமே பெற்றனர்.

கஸ்பா தொகுதி 28 ஆண்டுகளாக பா.ஜனதாவின் கோட்டையாக இருந்த தொகுதியாகும். அந்த கட்சியை சேர்ந்த கிரிஷ்பாபத் அங்கு 5 முறை தொடர்ந்து எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றார். கடந்த தேர்தலின் போது தான் முக்தா திலக் வேட்பாளராக நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றார். கஸ்பா பேத் தொகுதியில் தோல்வி அடைந்தது பா.ஜனதாவுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

இருப்பினும் சுமார் 11 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தான் தோல்வி அடைந்து இருப்பதாகவும், இந்த தேர்தல் தோல்வி குறித்து பகுப்பாய்வு செய்யப்படும் என்றும் பா.ஜனதா தலைவர்கள் கூறியுள்ளனர்.

சிஞ்ச்வாட்டில் பா.ஜனதா வெற்றி

சிஞ்ச்வாட் தொகுதி வாக்கு எண்ணிக்கையில் ஆரம்பத்தில் பா.ஜனதா, தேசியவாத காங்கிரஸ் இடையே கடும்போட்டி நிலவியது. 2 பேரும் மாறி, மாறி முன்னணியில் இருந்தனர். ஒருகட்டத்துக்கு பிறகு பா.ஜனதா வேட்பாளர் அஸ்வினி ஜக்தாப்பின் கை ஓங்கியது. அதன்பிறகு அவர் தொடர்ந்து முன்னிலையில் இருந்தார்.

சுயேச்சையாக போட்டியிட்ட உத்தவ் தாக்கரே அணியை சேர்ந்த ராகுல் காலதேவும் கணிசமான வாக்குகளை பெற்றார். முடிவில் பா.ஜனதாவின் அஸ்வினி ஜக்தாப் அமோக வெற்றி பெற்றார். 32-வது சுற்று வாக்கு எண்ணிக்கையின் போது அஸ்வினி ஜக்தாப் 1 லட்சத்து 35 ஆயிரத்து 603 வாக்குகள் பெற்று இருந்தார். தேசியவாத காங்கிரசின் நானா காதேவுக்கு 99 ஆயிரத்து 435 வாக்குகள் கிடைத்தது. சுயேச்சை வேட்பாளர் ராகுல் காலதே 44 ஆயிரத்து 112 வாக்குகள் பெற்றார்.

இடைத்தேர்தல் பாடம்

மராட்டிய இடைத்தேர்தல் முடிவுகள் அரசியல் கட்சிகளுக்கு பாடமாகவே அமைந்து உள்ளது. எதிர்க்கட்சிகள் இணைந்து செயல்பட்டதால், அவர்கள் கஸ்பா பேத் தொகுதியை பா.ஜனதாவிடம் இருந்து பறிக்க முடிந்தது. அதேவேளையில் சிஞ்ச்வாட் தொகுதியில் மறைந்த எம்.எல்.ஏ.வின் மனைவி போட்டியிட்டதால் அனுதாப அலை காரணமாக பா.ஜனதா வெற்றி பெற்றதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்