மதுரை ரெயில் தீ விபத்து: உள்துறை மந்திரி அமித்ஷா இரங்கல்
மதுரை ரெயில் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்துக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இரங்கல் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
மதுரை அருகே சுற்றுலா ரெயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உத்தரபிரதேசத்தை சேர்ந்த 9 பேர் உயிரிழந்தனர். மேலும், சிலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், ரெயில் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்துக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது,
"தமிழகத்தின் மதுரையில் நடந்த பயங்கர ரெயில் தீ விபத்து வருத்தம் அளிக்கிறது. தங்களின் அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனைகள்." இவ்வாறு அமித்ஷா எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.