மத்திய பிரதேசம்: சில்மிஷம், கொலை குற்றவாளிகளின் ரூ.1.5 கோடி மதிப்பிலான வீடுகள் இடித்து, தரைமட்டம்

மத்திய பிரதேசத்தில் வருங்கால மனைவியை சில்மிஷம் செய்தவர்களை தட்டி கேட்ட நபர் கொலையான வழக்கில், குற்றவாளிகளின் ரூ.1.5 கோடி மதிப்பிலான வீடுகள் இடித்து, தரைமட்டம் ஆக்கப்பட்டது.;

Update: 2023-04-18 06:26 GMT

போபால்,

மத்திய பிரதேசத்தில் ரத்லம் மாவட்டத்தில் தொழிற்பேட்டை பகுதியில் தனது வருங்கால மனைவியுடன் மொஹ்சின் அனீஸ் கான் என்பவர் சில நாட்களுக்கு முன் சென்று கொண்டிருந்தபோது, 4 பேர் கொண்ட கும்பல் அவர்களை வழிமறித்து உள்ளது.

அந்த பெண்ணை உடல் ரீதியாக துன்புறுத்தி உள்ளனர். இதனை தட்டி கேட்ட அனீஸ் கானை அந்த கும்பல் இரும்பு தடிகள் மற்றும் பேஸ்பால் மட்டை ஆகியவற்றை கொண்டு கடுமையாக தாக்கி உள்ளனர்.

இதில் பலத்த காயமடைந்த அந்நபர் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும், அவர் மருத்துவமனையில் உயிரிழந்து விட்டார். இந்த சம்பவத்தில், பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த தாக்குதலில் ஈடுபட்ட சாஹில் கான் (வயது 21), ரகீல் கான் (வயது 20), சாதிக் அலி (வயது 29) மற்றும் வாசிப் கான் (வயது 27) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இதன்பின் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதனை தொடர்ந்து, ரகீல் மற்றும் சாஹிலின் ரூ.50 லட்சம் மதிப்பிலான சட்டவிரோத சொத்துகளை உள்ளூர் நிர்வாகம் இடித்து தள்ளியது. சாதிக்கின் ரூ.1 கோடி மதிப்பிலான இரண்டடுக்கு கட்டிடம் ஒன்றும் இடித்து தள்ளப்பட்டது.

தொடர்ந்து, இதுபோன்று தகாத செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை செய்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்