மத்திய பிரதேசம்: ஐ.சி.யூ.வில் சுற்றி திரிந்து, மருத்துவ கழிவுகளை உண்ட பசு

மத்திய பிரதேசத்தில் மருத்துவமனையின் ஐ.சி.யூ.வில் சுற்றி திரிந்து, மருத்துவ கழிவுகளை பசு உண்ட சம்பவம் நடந்து உள்ளது.

Update: 2022-11-20 11:50 GMT



போபால்,


மத்திய பிரதேசத்தின் ராஜ்கார் மாவட்டத்தில் உள்ள மாவட்ட மருத்துவமனையின் ஐ.சி.யூ. வார்டின் உள்ளே பசு ஒன்று திடீரென புகுந்து உள்ளது. அது அந்த பகுதியில் நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் வார்டில் சுற்றி திரிந்து உள்ளது.

அந்த மருத்துவமனை, பசுக்களை விரட்டுவதற்கு என 2 ஆட்களை தனியாக பணிக்கு அமர்த்தி இருந்துள்ளது. எனினும், அவர்கள் இருவரும் சம்பவம் நடந்தபோது இல்லை என கூறப்படுகிறது.

அந்த பசு சுதந்திரமுடன் சுற்றி திரிந்ததுடன், குப்பை தொட்டியில் கிடந்த மருத்துவ கழிவு பொருட்களை உண்டுள்ளது. நாள் முழுவதும் பாதுகாவலர்கள் பணியில் இருந்தபோதும், அவர்களும் பசுவை மருத்துவமனையில் இருந்து வெளியே அனுப்ப முன்வரவில்லை.

நோயாளிகளின் உறவினர்களே தங்களது வார்டில் இருந்து பசுவை வெளியே விரட்டியுள்ளனர். இதுபற்றிய வீடியோ வெளிவந்து, பணியாளர்கள் 2 பேரும் மற்றும் பாதுகாவலர் ஒருவரும் என மொத்தம் 3 பேர் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளனர்.

இதனை மாவட்ட மருத்துவமனையின் தலைமை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ராஜேந்திர கட்டாரியா உறுதி செய்ததுடன், நடந்த சம்பவம் பற்றிய தகவல் எனது கவனத்திற்கு வந்துள்ளது. வார்டு பணியாளர் மற்றும் பாதுகாவலருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இந்த சம்பவம் எங்களது பழைய கொரோனா ஐ.சி.யூ. வார்டில் நடந்து உள்ளது என கூறியுள்ளார். மத்திய பிரதேச பொது சுகாதார மற்றும் குடுமபநல மந்திரி பிரபுராம் சவுத்ரி தொடக்கத்தில், இதுபோன்று நடந்த சம்பவம் பற்றி தனக்கு தெரியவரவில்லை என கூறினார். பின்பு வீடியோ வைரலான நிலையில், பணியாளர்கள் 3 பேர் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்