மத்தியபிரதேச பா.ஜனதா அரசு மீது ஊழல் புகார் - பிரியங்கா மீது வழக்கு பதிவு
மத்தியபிரதேச பா.ஜனதா அரசு மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தியதற்காக, பிரியங்கா, கமல்நாத் ஆகியோரின் 'டுவிட்டர்' பக்கத்தை இயக்குபவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்தூர்,
மத்தியபிரதேசத்தில், சிவராஜ்சிங் சவுகான் தலைமையிலான பா.ஜனதா அரசு நடந்து வருகிறது. அங்கு இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கிறது.இந்நிலையில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா, சமீபத்தில் மத்தியபிரதேச அரசு மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தினார். அவர் தனது 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருந்ததாவது:-
மத்தியபிரதேச ஒப்பந்ததாரர்கள் சங்கம், தாங்கள் 50 சதவீத கமிஷன் கொடுத்தால்தான், ஒப்பந்த பணிக்கான பணத்தை மாநில அரசு விடுவிப்பதாக ஐகோர்ட்டு தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதி உள்ளது.
கர்நாடகாவில் இருந்த பா.ஜனதா அரசு, 40 சதவீத கமிஷன் பெற்று வந்தது. தற்போது, தங்கள் சாதனையை தாங்களே முறியடிப்பதுபோல், மத்தியபிரதேச பா.ஜனதா அரசு 50 சதவீத கமிஷன் பெறுகிறது.
கர்நாடக அரசை கர்நாடக மக்கள் நீக்கியதுபோல், மத்தியபிரதேச அரசை மத்தியபிரதேச மக்கள் நீக்குவார்கள் என்று அவர் கூறியுள்ளர்.
போலீசில் புகார்
மத்தியபிரதேச மாநில முன்னாள் முதல்-மந்திரியும், மாநில காங்கிரஸ் தலைவருமான கமல்நாத், முன்னாள் மத்திய மந்திரி அருண்யாதவ் ஆகியோரும் அதே கருத்தை தங்களது 'டுவிட்டர்' பக்கத்தில் வெளியிட்டனர்.
இதற்கிடையே, மத்தியபிரதேச மாநிலம் இந்தூர் நகர பா.ஜனதா சட்டப்பிரிவு அமைப்பாளர் நிமேஷ் பதக் என்பவர், பிரியங்கா உள்ளிட்டோருக்கு எதிராக இந்தூர் நகர போலீசில் புகார் கொடுத்தார்.
அதன்பேரில், பிரியங்கா, கமல்நாத், அருண்யாதவ் ஆகியோரின் 'டுவிட்டர்' பக்கங்களை இயக்கும் நிர்வாகிகள் மற்றும் ஞானேந்திர அவஸ்தி ஆகியோருக்கு எதிராக இந்தூர் நகரின் சன்யோகிதகஞ்ச் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்திய தண்டனை சட்டத்தின் 402 (மோசடி) மற்றும் 469 ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சி பொய் சொல்லி வருவதாக முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான் மறுப்பு தெரிவித்துள்ளார்.
மாநில உள்துறை மந்திரி நரோட்டம் மிஸ்ரா, ''தனது குற்றச்சாட்டுக்கு பிரியங்கா ஆதாரம் அளிக்க வேண்டும். இல்லாவிட்டால், மாநில அரசும், பா.ஜனதாவும் சட்ட நடவடிக்கை எடுக்கும்'' என்று கூறியுள்ளார்.