மத்திய பிரதேசம்: ஆண் சிறுத்தை புலியுடனான பாலியல் உறவில், தக்சா பலி என தகவல்

மத்திய பிரதேசத்தில் குனோ தேசிய பூங்காவில் 2 மாதங்களில் 3-வது சிறுத்தை புலி உயிரிழந்து உள்ளது.

Update: 2023-05-09 14:01 GMT

குனோ,

நமீபியா மற்றும் தென்ஆப்பிரிக்காவில் இருந்து புராஜெக்ட் சீட்டா என்ற பெயரிலான திட்டத்தின் கீழ் 20 சிறுத்தை புலிகள் இந்தியாவுக்கு தனி விமானத்தில் கொண்டு வரப்பட்டன.

சிறுத்தை புலிகளை பாதுகாக்கும் நோக்குடனான இந்த திட்டத்தில், அவை தீவிர கண்காணிப்புக்கு பின்னர், மத்திய பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் விடப்பட்டன.

அவற்றின் நடவடிக்கைகளை தனியாக அதிகாரிகள் தலைமையிலான கண்காணிப்பு குழு ஒன்று கவனித்து வந்தது. அவை அனைத்திற்கும் பெயர்களும் வழங்கப்பட்டன.

இந்த நிலையில், கடந்த மார்ச் 27-ந்தேதி நமீபியாவில் இருந்து வந்த சாஷா என்ற பெண் சிறுத்தை புலி பூங்காவில் இறந்து கிடந்தது. உடல் உள்ளுறுப்பு பாதிப்பால் அது உயிரிழந்து உள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு, ஏப்ரலில் 6 வயது உடைய உதய் என்ற ஆண் சிறுத்தை புலி இதய செயலிழப்பால் குனோ பூங்காவில் உயிரிழந்து கிடந்தது.

இந்நிலையில், தென்ஆப்பிரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்ட தக்சா என்ற பெண் சிறுத்தை புலி இன்று காலை குனோ தேசிய பூங்காவில் படுகாயங்களுடன் கிடந்தது.

இதனை கவனித்த கண்காணிப்பு குழு அதற்கு மருத்துவ சிகிச்சை அளித்தது. இதில், ஆண் சிறுத்தை புலி பாலியல் உறவில் கடுமையாக செயல்பட்டதில் காயம் ஏற்பட்டு உள்ளது என தெரிய வந்து உள்ளது.

இதுபோன்ற விசயங்கள் இவ்வகை விலங்கினங்களிடம் காணப்படுவது சகஜம். தொடர் சிகிச்சை அளித்தும், பலனின்றி சில மணிநேரங்களில் தக்சா உயிரிழந்து உள்ளது.

இதனால், மத்திய பிரதேசத்தில் குனோ தேசிய பூங்காவில் கடந்த 2 மாதங்களில் 3-வது சிறுத்தை புலி உயிரிழந்து உள்ளது சிறுத்தை புலிகளை பாதுகாக்கும் அரசின் திட்டத்திற்கு அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்