மத்தியபிரதேசத்தில் தனியார் ஆஸ்பத்திரி தீ விபத்தில் 8 பேர் பலி

மத்தியபிரதேசத்தில் தனியார் ஆஸ்பத்திரியில் நடந்த தீ விபத்தில் 4 நோயாளிகள் உள்பட 8 பேர் பலியானார்கள்.

Update: 2022-08-01 20:46 GMT

ஜபல்பூர்,

மத்தியபிரதேச மாநிலம் ஜபல்பூரில் ஒரு தனியார் பன்னோக்கு உயர் சிறப்பு ஆஸ்பத்திரி உள்ளது. அது 3 மாடிகள் கொண்டது.

அந்த ஆஸ்பத்திரியில் நேற்று பிற்பகலில் திடீரென தீப்பிடித்துக்கொண்டது. அப்போது, அங்கு 20 முதல் 25 பேர்வரை இருந்தனர். பெரும் தீவிபத்து என்பதால் தீ மளமளவென பரவியது.

தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் பணியிலும், உள்ளே சிக்கிய நோயாளிகளை மீட்கும் பணியிலும் ஈடுபட்டனர்.

ஆனால் அதற்குள் தீயில் சிக்கிய 8 பேர் கருகி பலியானார்கள். இவர்களில் 4 பேர் நோயாளிகள் ஆவர். ஒரு பராமரிப்பாளர், 3 ஊழியர்கள் ஆகியோரும் இறந்தவர்களில் அடங்குவர்.

மேலும் 5 பேர் தீக்காயம் அடைந்தனர். ஜபல்பூர் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இத்தகவல்களை ஜபல்பூர் மாவட்ட கலெக்டர் இளையராஜா தெரிவித்தார்.

தீ விபத்துக்கு மின்கசிவுதான் காரணம் என்று முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, பலியானோர் குடும்பங்களுக்கு முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான் தலா ரூ.5 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்