மத்திய பிரதேசம்: தெருநாய்கள் கடித்து 7 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு
தெருநாய்கள் கடித்ததில் குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது.;
போபால்,
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள அயோத்தி நகர் பகுதியில், 7 மாத ஆண் குழந்தையை தெருநாய்கள் கடித்து இழுத்துச் சென்றது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவின. இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்த வீடியோவில் இருப்பது குணா மாவட்டத்தைச் சேர்ந்த கூழித் தொழிலாளி ஒருவரின் குழந்தை என்பது தெரியவந்தது.
கடந்த புதன்கிழமை, அந்த குழந்தையின் தாய் குழந்தையை தரையில் வைத்துவிட்டு அருகில் வேலை செய்து கொண்டிருந்ததாகவும், அப்போது தெருநாய்கள் குழந்தையை கடித்து இழுத்துச் சென்றதாகவும் போலீசாரிடம் குழந்தையின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். நாய்கள் கடித்ததில் குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது. இதையடுத்து குழந்தையின் உடலை அருகில் உள்ள கிராமத்தில் புதைத்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து போலீசார், குழந்தையின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, குழந்தையின் குடும்பத்திற்கு மாவட்ட நிர்வாகம் ரூ.50,000 நிதியுதவி வழங்கியுள்ளதாகவும், மேலும் ரூ.50,000 விரைவில் வழங்கப்படும் என்றும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.