'வெள்ளை தாளில் கையெழுத்து...' - சந்தேஷ்காளியில் புகாரை வாபஸ் பெற்ற 2 பெண்கள் அதிர்ச்சி தகவல்
வெள்ளை தாளில் கையெழுத்து பெற்று தங்கள் பெயரை புகாரில் சேர்த்துக்கொண்டதாக சந்தேஷ்காளியைச் சேர்ந்த 2 பெண்கள் கூறியுள்ளனர்.;
கொல்கத்தா,
மேற்கு வங்காளத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஷேக் ஷாஜகான் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள், சந்தேஷ்காளி பகுதியில் உள்ள பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டனர் என்றும், அவர்களுடைய நிலங்களை அபகரித்துக் கொண்டனர் என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சந்தேஷ்காளியில் உள்ள பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த விவகாரம் மேற்கு வங்காளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மீது பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு பா.ஜ.க. தலைவர்கள் கடும் விமர்சனங்களை முன்வைத்தனர். இந்த வழக்கில் நீண்ட நாட்கள் தலைமறைவாக இருந்த ஷேக் ஷாஜகானை போலீசார் கைது செய்த நிலையில், அவரை கட்சியில் இருந்து 6 ஆண்டுகள் இடைநீக்கம் செய்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அறிவித்தது.
இந்நிலையில், இந்த வழக்கில் திடீர் திருப்பமாக சந்தேஷ்காளியைச் சேர்ந்த ஒரு பெண் மற்றும் அவரது மாமியார் ஆகிய இருவரும் தங்கள் புகாரை வாபஸ் பெற்றுள்ளனர். இது தொடர்பாக அந்த பெண்கள் மாஜிஸ்திரேட் முன்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். அதில், ஒரு போலியான புகாருடன் தங்களை தொடர்புபடுத்திக் கொள்ள விரும்பவில்லை என்றும், புகாரை திரும்ப பெற முயன்றபோது தாங்கள் விரட்டியடிக்கப்பட்டதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
இது குறித்து அந்த பெண் கூறுகையில், "ஒரு நாள் பியாலி தாஸ் மற்றும் மம்பி தாஸ் ஆகிய 2 பெண்கள் எங்கள் வீட்டிற்கு வந்து எனது மாமியாரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அவர் காவல் நிலையத்திற்கு சென்றதும் உள்ளிருந்து கதவைப் பூட்டிவிட்டனர். பின்னர் அவரிடம் வெள்ளை தாளில் கையெழுத்து வாங்கினர். ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் சம்பளம் தொடர்பாக கையெழுத்து பெறுவதாக எங்களிடம் கூறினர். ஆனால் எங்கள் பெயர் பாலியல் வழக்கில் புகார் அளித்தவர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது" என்று தெரிவித்தார்.
மேலும், "எங்களுக்கு அவ்வாறு எதுவும் நடக்கவில்லை. இந்த புகார் போலியானது. போலியான புகாருடன் எங்களை தொடர்புபடுத்திக்கொள்ள நாங்கள் விரும்பவில்லை" என்று அவர் கூறினார். அதே சமயம், புகாரை திரும்ப பெற்றதால் தங்களுக்கு பல்வேறு மிரட்டல்கள் வருவதாகக் கூறி போலீசாரிடம் மற்றொரு புதிய புகாரை அந்த பெண்கள் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.