பஞ்சாப்பில் நிதி நிறுவனத்தில் ரூ.7 கோடி கொள்ளை

பஞ்சாப்பில் நிதி நிறுவனத்தில் ரூ.7 கோடியை கொள்ளையடித்த மர்ம நபர்கள் வேனில் ஏறி அங்கிருந்து தப்பி சென்றனர்.

Update: 2023-06-10 17:57 GMT

பஞ்சாப் மாநிலம் லூதியானா மாவட்டத்தில் உள்ள புதிய ராஜகுரு நகர் பகுதியில் தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அதிகாலையில் இந்த நிதி நிறுவனத்துக்கு வந்த 10 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று, அங்கு காவலுக்கு இருந்த 4 காவலர்களை சரமாரியாக தாக்கி நிலைகுலைய செய்தனர். பின்னர் அந்த மர்ம நபர்கள் நிதி நிறுவனத்தின் சுவரை உடைத்து உள்ளே புகுந்தனர். அதை தொடர்ந்து நிதி நிறுவனத்தில் இருந்த ரூ.7 கோடியை கொள்ளையடித்த அந்த மர்ம நபர்கள் நிதி நிறுவனத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பணம் எடுத்து செல்லும் வேனில் ஏறி அங்கிருந்து தப்பி சென்றனர்.

முன்னதாக கொள்ளையர்கள் நிதி நிறுவனத்தில் இருந்த கண்காணிப்பு கேமராக்களின் வீடியோ பதிவு கருவியை தங்களுடன் எடுத்து சென்றனர். அதிகாலையில் அரங்கேறிய இந்த துணிகர கொள்ளை சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே கொள்ளையர்கள் தப்பி செல்வதற்கு பயன்படுத்திய நிதி நிறுவனத்தின் வேன் சம்பவம் நடத்த இடத்தில் இருந்து சில கி.மீ. தொலைவில் கேட்பாராற்று நிற்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.

உடனடியாக அந்த வேனை போலீசார் கைப்பற்றினர். மேலும் அந்த வேனில் இருந்து 2 ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. ரூ.7 கோடியுடன் தப்பியோடிய கொள்ளையர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்