தேர்வில் குறைந்த மதிப்பெண்... கடத்தல் நாடகம் ஆடி பெற்றோரிடம் ரூ.1 கோடி கேட்ட மாணவி

மேற்கு வங்காளத்தில் 10-ம் வகுப்பு தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்த மாணவி, பயத்தில் கடத்தல் நாடகம் ஆடி பெற்றோரிடம் ரூ.1 கோடி கேட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்து உள்ளது.

Update: 2023-05-20 14:29 GMT

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தின் தெற்கு கொல்கத்தா நகரில் பன்ஸ்துரோனி பகுதியில் 16 வயது மாணவி ஒருவர் வசித்து வருகிறார். அவர் மற்றவர்களை போன்று 10-ம் வகுப்பு தேர்வு எழுதி உள்ளார். இந்நிலையில், 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று வெளிவந்தன.

இதற்கான மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்வதற்காக ஸ்கூட்டி ஒன்றில், தனது 6 வயது சகோதரியுடன் அவர் சென்றுள்ளார். தேர்வு முடிவில், குறைந்த மதிப்பெண்களை பெற்றது தெரிந்து அந்த மாணவி அதிர்ச்சி அடைந்து உள்ளார்.

இதனை பெற்றோரிடம் எப்படி தெரிவிப்பது என அவர் பயந்து போய் இருந்து உள்ளார். ஆனால், அது மாணவியை வேறொரு விபரீத முடிவில் கொண்டு போய் விட்டு உள்ளது. மாணவி தனது சகோதரியுடன் நகரில் இருந்து வேறு இடத்திற்கு தப்பி சென்று விட்டார்.

அதன்பின் தனது தந்தைக்கு எஸ்.எம்.எஸ். ஒன்றை அனுப்பி, அதில் உங்களது மகள்களை விடுவிக்க வேண்டுமென்றால் ரூ.1 கோடி பணம் தர வேண்டும் என கேட்டு, மிரட்டி உள்ளார். இதற்காக நேபாளகஞ்ச் பகுதிக்கு வரும்படி அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

போலீசாரின் விசாரணையில், கிருஷ்ணாநகர் செல்லும் உள்ளூர் ரெயிலில் அவர்கள் சென்றது தெரிய வந்தது. மாணவியின் ஸ்கூட்டியும் கைப்பற்றப்பட்டது. அரசு ரெயில்வே போலீஸ் மற்றும் கிருஷ்ணாநகர் மாவட்ட போலீஸ் உதவியுடன் கொல்கத்தா போலீசார் புகைப்படங்களை வெளியிட்டு தேடினர்.

இதன்பின், நாடியா மாவட்டத்தில் மருத்துவமனை ஒன்றின் முன்னால் சிறுமிகள் இரண்டு பேரும் நின்றுள்ளனர். கிருஷ்ணாநகர் மாவட்ட போலீஸ் அவர்களை மீட்டு, பின் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

இதுபற்றி நடந்த விசாரணையில், 10-ம் வகுப்பு தேர்வில் அந்த மாணவி 31% மதிப்பெண்களை பெற்றது தெரிய வந்தது. இதனால், மனவருத்தத்தில் மாணவி இருந்து உள்ளார்.

பெற்றோரிடம் நல்ல மதிப்பெண் வாங்குவேன் என உறுதிமொழி அளித்து இருந்து உள்ளார். ஆனால், அதன்படி நடக்கவில்லை. இதனால், சகோதரியை அழைத்து கொண்டு ஊரை விட்டே தப்பி சென்ற மாணவி, கடத்தல் நாடகம் நடத்தி சொந்த தந்தையிடம் பணம் பறிக்க முயன்றது விசாரணையில் தெரிய வந்து உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்