லவ் ஜிகாத்: திருமணம் நிச்சயித்த பெண்ணை பலாத்காரம் செய்து, மிரட்டிய நபர்

மத்திய பிரதேசத்தில் திருமணம் நிச்சயித்த பெண்ணை, லவ் ஜிகாத் பெயரில் பலாத்காரம் செய்து, திருமணம் செய்யும்படி நபர் மிரட்டியுள்ளார்.

Update: 2022-12-04 15:26 GMT



இந்தூர்,


மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரில் ஹீரா நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கவுரிநகர் பகுதியை சேர்ந்த பி.காம் பட்டப்படிப்பு படித்த 25 வயது மாணவி ஒருவர் போலீசில் புகார் அளித்து உள்ளார்.

சமூக ஊடகத்தின் வழியே 8 ஆண்டுகளுக்கு முன் அன்வர் கான் என்பவரை அந்த இளம்பெண் தொடர்பு கொண்டுள்ளார். இன்ஸ்டாகிராமில் அன்வர் தனது பெயரை அன்னு என வைத்திருந்து உள்ளார். இதன்பின்பு, அன்னுவை இளம்பெண் நேரில் சந்தித்து பேசியுள்ளார்.

ஆனால், அன்வர் தனது அடையாளம் வெளியே தெரியாமல் மறைத்து உள்ளார் என இளம்பெண் குற்றச்சாட்டாக கூறியுள்ளார். எனினும், 5 ஆண்டுகளுக்கு முன், அன்னுவின் உண்மையான பெயர் அன்வர் என்றும் அவர் முஸ்லிம் என்றும் இளம்பெண் தெரிந்து கொண்டார்.

இதன்பின்பு, அன்னுவை விட்டு பிரிந்த அவர், தன்னை தொடர்பு கொள்ள வேண்டாம் என கூறி விட்டார். ஆனால், அன்வர் தொடர்ந்து இளம்பெண்ணை பின்தொடர்ந்துள்ளார்.

இந்நிலையில், இந்த ஆண்டில், கடந்த செப்டம்பரில் இளம்பெண்ணுக்கு வேறொரு நபருடன் குடும்பத்தினர் மும்பையில் வைத்து நிச்சயதார்த்தம் செய்துள்ளனர்.

இதுபற்றி அறிந்த அன்வர், இளம்பெண்ணை மிரட்டியதுடன், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கட்டாயப்படுத்தி உள்ளார். இந்நிலையில், ஒரு நாள் வீட்டில் இளம்பெண் தனியாக இருந்த சந்தர்ப்பத்தில் அவரை சந்தித்த அன்வர், அதனை பயன்படுத்தி பலாத்காரம் செய்து உள்ளார்.

திருமண நிச்சய நிகழ்வை கலைத்து விடுவேன் என மிரட்டியதுடன், இஸ்லாம் மதத்திற்கு மாறி தன்னை திருமணம் செய்யும்படி கட்டாயப்படுத்தி உள்ளார். இளம்பெண்ணை மிரட்டும் நோக்குடன் பலாத்காரம் பற்றி அனைவரிடமும் கூறி விடுவேன் என அன்வர் மிரட்டியுமுள்ளார்.

பல வாரங்களாக இந்த துன்புறுத்தல் மற்றும் சித்ரவதை தொடர்ந்த நிலையில், கடந்த வியாழ கிழமை தனது குடும்பத்தினரிடம் பலாத்காரம் பற்றி இளம்பெண் கூறியுள்ளார். இதன்பின் பஜ்ரங் தளம் உள்ளிட்ட இந்து அமைப்புகள் உதவியுடன் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, அன்வர் மீது பலாத்காரம், மதம் மாற கட்டாயப்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்தனர். இந்தூரின் சதார் பஜார் பகுதியில் சிக்கந்தராபாத் காலனியில் வசித்து வந்த அன்வரை போலீசார் கைது செய்து உள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்