15 அரசு அதிகாரிகள் வீடுகளில் லோக் அயுக்தா அதிரடி சோதனை

பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் 62 இடங்களில் 15 அரசு அதிகாரிகளின் வீடு, அலுவலகங்களில் லோக் அயுக்தா போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையில் கட்டுக்கட்டாக பணம், நகைகள், ஆவணங்கள் சிக்கின.

Update: 2023-06-28 21:40 GMT

பெங்களூரு:

பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் 62 இடங்களில் 15 அரசு அதிகாரிகளின் வீடு, அலுவலகங்களில் லோக் அயுக்தா போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையில் கட்டுக்கட்டாக பணம், நகைகள், ஆவணங்கள் சிக்கின.

அதிகாரிகள் வீடுகளில் சோதனை

கர்நாடகத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து வைத்திருக்கும் அரசு அதிகாரிகளின் வீடுகளில் லோக் அயுக்தா போலீசார் அதிரடி சோதனை நடத்தி அதிர்ச்சி வைத்தியம் கொடுப்பது வழக்கம்.

அதன்படி, பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு அரசு அதிகாரிகள் தங்களது வருமானத்தை காட்டிலும், அதிகமாக சொத்து சேர்த்து வைத்திருப்பதாக லோக் அயுக்தா போலீசாருக்கு புகார்கள் வந்தது.

இதையடுத்து, புகார்கள் வந்த அரசு அதிகாரிகள் பற்றிய தகவல்களை லோக் அயுக்தா போலீசார் சேகரித்து வந்தனர். அவர்களது சொத்து விவரங்கள் உள்ளிட்டவற்றை சேகரிக்கும் பணிகளும் நடந்து வந்தது. இந்த நிலையில், பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறப்படும் 15 அரசு அதிகாரிகளின் வீடுகளில் லோக் அயுக்தா போலீசார் நேற்று ஒரே நாளில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

62 இடங்களில் நடந்தது

பெங்களூரு கே.ஆர்.புரம், சககாரநகர், பசவேசுவராநகர், பெங்களூரு புறநகர், ராமநகர், கோலார், சிக்பள்ளாப்பூர், துமகூரு, பெலகாவி, சிவமொக்கா, குடகு, தாவணகெரே, ஹாவேரி, பாகல்கோட்டை, யாதகிரி, ராய்ச்சூர், சிக்கமகளூரு, கலபுரகி ஆகிய மாவட்டங்களில் 62-க்கும் மேற்பட்ட இடங்களில் 15 அரசு அதிகாரிகளின் வீடு, அலுவலகங்கள், உறவினர்களின் வீடுகள், பண்ணை வீடுகளில் நேற்று அதிகாலை 4.30 மணிக்கே லோக் அயுக்தா போலீசார் இந்த சோதனையை மேற்கொண்டனர். சில அதிகாரிகளின் வீடுகளில் இந்த சோதனை நள்ளிரவு வரை நீடித்தது.

பெங்களூரு கே.ஆர்.புரம் தாசில்தாராக இருந்து வருபவர் அஜீத்குமார் ராய். இவரது வீடு, அலுவலகங்களில் நேற்று சோதனை நடத்தப்பட்டது. கொடிகேஹள்ளி அருகே சககாரநகரில் உள்ள வீடு, சந்திரா லே-அவுட்டில் உள்ள வீடு ஆகிய இடங்களிலும் போலீசார் சோதனை நடத்தினார்கள். அப்போது தாசில்தார் அஜீத்குமார் ராய் வீட்டிலேயே இருந்தார். அவருக்கு சொந்தமான 11 இடங்களிலும் இந்த சோதனை நடந்திருந்தது.

தாசில்தார் வீட்டில் ரூ.40 லட்சம்

அப்போது அஜீத்குமார் ராய் வீட்டில் இருந்து ரூ.40 லட்சம் ரொக்கம், 5 சொகுசு கார்கள், 10 வீடுகள் இருப்பதற்கான சொத்து ஆவணங்கள் போலீசாரிடம் சிக்கியது. அவரிடம் இருக்கும் சொகுசு கார்களின் மதிப்பு மட்டும் ரூ.2½ கோடி என்று கூறப்படுகிறது. அஜீத்குமார் ராய் தட்சிண கன்னடா மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார்.

அதனால் அங்குள்ள அஜீத்குமார் ராய்க்கு சொந்தமான வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டு இருந்தது. அவரது வீட்டில் இரவு வரை தொடர்ந்து சோதனை நடைபெற்றது. ஏற்கனவே தாசில்தார் அஜீத்குமார் ராய் முறைகேட்டில் ஈடுபட்டதாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, மீண்டும் பணியில் சேர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பெண் அதிகாரி

பாகல்கோட்டை மாவட்டத்தில் விவசாயத்துறை இணை இயக்குனராக பணியாற்றி வருபவர் சேத்தனா பட்டீல். இந்த பெண் அதிகாரி வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின் போது லோக் அயுக்தா போலீசாரே அதிர்ச்சி அடைந்தனர். அதாவது கட்டுக்கட்டாக ரூ.32 லட்சம் சிக்கியது. மேலும் ஏராளமான தங்க நகைகள், வெள்ளி பொருட்களும் சிக்கியது. அந்த தங்க நகைகளின் மதிப்பை கண்டறிய நகை ஆசாரிகள் வரவழைக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது.

இதுதவிர 30-க்கும் மேற்பட்ட விலை உயர்ந்த விதவிதமான கைப்பைகளும் சேத்தனா வீட்டில் கிடைத்தது. அவரது வீட்டில் சிக்கிய சொத்து பத்திரங்கள், ஆவணங்களை போலீசார் பரிசீலனை நடத்தி வருகின்றனர். மேலும் வங்கி கணக்குகள், லாக்கர்களில் இருக்கும் பணம், டெபாசிட் செய்துள்ள தகவல்கள் குறித்தும் அதிகாரி சேத்தனாவிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

மனைவி பெயரில் சொத்துக்கள்

சிக்கமகளூருவில் அரசு அதிகாரியாக இருக்கும் கங்காதர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின் போது, அவருக்கு பல கோடி ரூபாய்க்கு சொத்துகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் தனது மனைவி பெயரில் பெட்ரோல் விற்பனை நிலையம் நடத்தி வருவதுடன், ரெசார்ட் ஓட்டல் இருப்பதும், 16 வீட்டுமனைகள் இருப்பதற்கான ஆவணங்களும் லோக் அயுக்தா போலீசாருக்கு கிடைத்திருந்தது. ஒட்டு மொத்தமாக அவரது வீட்டில் ரூ.4 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது.

இதுபோன்று, துமகூருவில் கிராம வளர்ச்சி துறையில் என்ஜினீயராக இருக்கும் கே.பி.புட்டராஜ், கோலார் மாவட்டத்தில் என்ஜினீயராக இருக்கும் கோதண்டராமைய்யா, பெலகாவி மாவட்டத்தை சேர்ந்தவரும், விஜயநகர் மாவட்டம் ஹரப்பனஹள்ளியில் மின்வாரிய என்ஜினீயராக பணியாற்றி வருபவருமான சேகர் பகரூவி, சிக்பள்ளாப்பூர் மாவட்டத்தில் கலால்துறை இன்ஸ்பெக்டராக பணியாற்றும் ரமேஷ் ஆகியோருக்கு சொந்தமான வீடு, அலுவலங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.

அதிகாரிக்கு கல்குவாரி

இதுதவிர துமகூரு மாவட்டத்தில் நகர திட்டமிடல் துறையில் நிர்வாக இயக்குனராக பணியாற்றும் ரவி என்பவர் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டு இருந்தது. அவருக்கு சொந்தமான பண்ணை வீடு, பட்டுநூல் ஆலை, கல்குவாரி, தோட்டங்கள் ஆகிய இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. வீட்டுமனைகள் இருப்பதற்கான சொத்து ஆவணங்கள் சோதனையில் சிக்கின. அவரது வீட்டில் இருந்து தங்க நகைகள், ரொக்கப்பணத்தையும் போலீசார் கைப்பற்றி எடுத்து சென்றனர்.

மேலும் பாகல்கோட்டை மாவட்டம் பீலகியில் விவசாயத்துறை அதிகாரியாக இருக்கும் கிருஷ்ணா, ராய்ச்சூர் மாவட்டம் பொதுப்பணித்துறை என்ஜினீயராக இருக்கும் ஜி.என்.பிரகாஷ், கலபுரகியில் கிராமப்புற குடிநீர் திட்ட என்ஜினீயர் சரணப்பா, விஜயாப்புராவில் என்ஜினீயராக பணியாற்றும் பீமனகவுடா, கலபுரகி மாவட்டத்தில் அரசு அதிகாரியாக பணியாற்றும் ஜே.பி.ஷெட்டி, குடகு மாவட்டம் மடிகேரியில் என்ஜினீயராக பணியாற்றும் முகமது பஷீர் ஆகியோரின் வீடுகளிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

மேலும் யாதகிரி மாவட்ட சுகாதார துறையில் உதவி என்ஜினீயராக பணியாற்றி வரும் விஸ்வநாதரெட்டி என்பவர் வீடு உள்பட 2 இடங்களில் லோக் அயுக்தா போலீசார் சோதனை நடத்தினர்.

கோடிக்கணக்கான ரூபாய் சொத்து குவிப்பு

இந்த சோதனையின் போது அரசு அதிகாரிகள் அனைவரும் தங்களது வருமானத்தை காட்டிலும் கோடிக்கணக்கான ரூபாய்க்கு சொத்துகள் வாங்கி குவித்து வைத்திருப்பதற்கான ஆவணங்கள், சொத்து பத்திரங்கள் லோக் அயுக்தா போலீசாருக்கு கிடைத்துள்ளது. இதுதவிர ஒவ்வொரு அதிகாரிகளின் வீடுகளில் இருந்தும் பல லட்சம் ரூபாய் ரொக்கம், தங்க நகைகள், வெள்ளி பொருட்கள், சொகுசு கார்கள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

அரசு அதிகாரிகள் பினாமி பெயரில் சொத்துகள் வாங்கி வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சோதனைக்கு உள்ளாகி இருக்கும் அரசு அதிகாரிகளின் மொத்த சொத்து மதிப்பு குறித்து லோக் அயுக்தா போலீசார் பரிசீலனை நடத்தி வருகின்றனர். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த அதிகாரிகளின் வீடுகளில் லோக் அயுக்தா நடத்திய இந்த சோதனை கர்நாடகத்தில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்