பெங்களூரு உள்பட 50 இடங்களில் நடந்தது: 14 அரசு அதிகாரிகள் வீடுகளில் லோக் அயுக்தா சோதனை

கர்நாடகத்தில் 14 அரசு அதிகாரிகளின் வீடுகளில் லோக் அயுக்தா போலீசார் சோதனை நடத்தினர்.

Update: 2023-08-17 18:45 GMT

பெங்களூரு:

பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் 14 அரசு அதிகாரிகளின் வீடுகளில் லோக் அயுக்தா போலீசார் சோதனை நடத்தினார்கள். 50 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டு இருந்தது. வருமானத்திற்கு அதிகமாக கோடிக்கணக்கான ரூபாய் சொத்து சேர்த்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகள், போலீசாரை லோக் அயுக்தா போலீசார் கைது செய்து வருகின்றனர். அதுபோல், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்க்கும் அரசு அதிகாரிகள், ஊழல், பிற முறைகேடுகளில் ஈடுபடும் அதிகாரிகள் வீடுகளிலும் லோக் அயுக்தா போலீசார் சோதனை நடத்தி அதிர்ச்சி வைத்தியம் கொடுப்பது வழக்கம். அதன்படி, அரசு அதிகாரிகள் சிலர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாக லோக் அயுக்தாவுக்கு புகார்கள் வந்திருந்தது.

இதையடுத்து, பெங்களூரு, ராமநகர், சித்ரதுர்கா, தாவணகெரே, பீதர், துமகூரு, மைசூரு, கொப்பல், பெலகாவி, குடகு, உப்பள்ளி, ராய்ச்சூர் உள்ளிட்ட 50 இடங்களில் அரசு அதிகாரிகளின் வீடுகள், அலுவலகங்கள், உறவினர்கள் வீடுகளில் நேற்று அதிகாலையில் இருந்து நள்ளிரவு வரை லோக் அயுக்தா போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். லோக் அயுக்தா போலீஸ் சூப்பிரண்டுகள், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் உள்பட 250-க்கும் மேற்பட்ட போலீசார் இந்த சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

பெங்களூருவில் மட்டும் 23-க்கும் மேற்பட்ட இடங்களில் லோக் அயுக்தா போலீசார் சோதனை நடத்தினார்கள். அதன்படி, பெங்களூரு மகாதேவபுரா மண்டலத்தில் மாநகராட்சயின் வருவாய் துறை ஆய்வாளாராக இருந்து வருபவர் நடராஜ். இவருக்கு சொந்தமான கே.ஆர்.புரத்தில் உள்ள வீட்டிலும், அவரது அலுவலகத்திலும் போலீசார் சோதனை நடத்தினார்கள். மேலும் ராமநகர் மாவட்டம் கனகபுராவில் உள்ள பண்ணை வீடு, வணிக கட்டிடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.

கனகபுராவில் 7½ ஏக்கரில் தென்னந்தோப்பு மற்றும் பண்ணை வீடும், 3 வீடுகள் இருப்பதும் தெரியவந்துள்ளது. இதுதவிர நடராஜ் வீட்டில் இருந்து சொத்து பத்திரங்கள், முக்கிய ஆவணங்கள் லோக் அயுக்தா போலீசாருக்கு கிடைத்துள்ளது. மேலும் பல லட்சம் ரூபாய் பணம், தங்க நகைகளும் அவரது வீட்டில் சிக்கியது. அவரது சொத்து மதிப்பு மட்டும் ரூ.4.91 கோடி என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதுபோல், பெங்களூரு மாநகராட்சி உதவி என்ஜினீயர் பாரதி, அவரது கணவரும் சித்ரதுர்கா மாவட்டம் ஒலல்கெரேயில் சிறிய நீர்ப்பாசனத்துறை என்ஜினீயராகவும் இருக்கும் மகேஷ் வீட்டிலும் நேற்று சோதனை நடத்தப்பட்டு இருந்தது. பெங்களூரு, தாவணகெரே, சித்ரதுர்காவில் உள்ள தம்பதியின் வீடு, அலுவலகங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. தாவணகெரே மாவட்டம் ஜெயநகரில் உள்ள வீட்டில் சோதனை நடத்திய போது போலீசாரே அதிர்ச்சி அடைந்தனர்.

அந்த வீட்டில் 1 கிலோ தங்க நகைகள், ரூ.15 லட்சம் மற்றும் ஆவணங்கள் இருந்தது. இதுதவிர காரிலும் சில ஆவணங்கள் இருந்தது. அவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தார்கள். மேலும் அரசு அதிகாரிகளான தம்பதியினர் வருமானத்திற்கு அதிகமாக பல கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்து வைத்திருப்பதற்கான ஆவணங்கள் லோக் அயுக்தா போலீசாருக்கு கிடைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பெங்களூரு புறநகர் மாவட்டம் தேவனஹள்ளி தாசில்தாராக இருந்து வருபவர் சிவராஜ். இவருக்கு சொந்தமான தேவனஹள்ளியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் பிளாட்டில் சோதனை நடத்தினார்கள். அப்போது அவரது வீட்டில் இருந்து முக்கிய ஆவணங்கள் போலீசாருக்கு கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது. அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.4.15 கோடிக்கு சிவராஜ் சொத்து சேர்த்திருப்பது தெரியவந்துள்ளது.

குடகு மாவட்டத்தில் கூடுதல் கலெக்டராக இருந்து வருபவர் நஞ்சுண்டகவுடா. இவருக்கு சொந்தமான குடகு மாவட்டம் மடிகேரியில் உள்ள வீடு, அலுவலகம், மைசூரு மாவட்டத்தில் உள்ள உறவினர்கள் வீடுகளில் லோக் அயுக்தா போலீசார் சோதனை நடத்தி இருந்தனர். இந்த சோதனையில் 30 ஏக்கர் நிலம், சொந்தமான வீடுகள் நஞ்சுண்டகவுடாவுக்கு இருப்பது தெரியவந்தது. அதற்கான சொத்து பத்திரங்களும் போலீசாருக்கு கிடைத்ததாக தெரிகிறது.

மாவட்ட கலெக்டர் வீட்டின் அருகேயே நஞ்சுண்டகவுடாவின் வீடும் உள்ளது. அந்த வீட்டில் இருந்து தங்க நகைகள் மற்றும் ஆவணங்களை கைப்பற்றி போலீசார் எடுத்து சென்றிருந்தனர். இதுதவிர ரூ.11½ லட்சம் ரொக்கமும் சிக்கி இருந்தது. கூடுதல் கலெக்டர் நஞ்சுண்ட கவுடாவுக்கு ம்டும் ரூ.3½ கோடிக்கும் மேல் சொத்து உள்ளது..

பீதர் மாவட்டம் சடகுப்பா போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றும் விஜய்குமார் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டு இருந்தது.அவரது வீட்டில் இருந்து தங்க நகைகள், சொத்து பத்திரங்கள் கிடைத்திருந்தது. விஜய்குமாருக்கு ரூ.1.80 கோடிக்கு சொத்துகள் இருப்பதாக லோக் அயுக்தா போலீசார் தெரிவித்துள்ளனர்.

பெலகாவி மாவட்டத்தில் மாநகராட்சி உதவி கமிஷனராக இருந்து வரும் சந்தோஷ் வீட்டிலும், உப்பள்ளியில் உள்ள அவருக்கு சொந்தமான வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டு இருந்தது. அவரது வீட்டில் பழமையான பொருட்களும் சந்தோஷ் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டு இருந்தது.அந்த பொருட்கள் எத்தனை ஆண்டுகள் பழமையானது, அவற்றின் மதிப்பு எவ்வளவு என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக லோக் அயுக்தா போலீசார் தெரிவித்துள்ளனர்.

கொப்பல் மாவட்டத்தில் நிர்மிதி மையத்தின் என்ஜினீயரான மஞ்சுநாத் பன்னிகொப்பா வீட்டிலும், அவரது உறவினருக்கு சொந்தமான வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டு இருந்தது. மேலும் துமகூரு மாவட்டத்தில் நகர வளர்ச்சி மற்றும் திட்டமிடுதல் துறையின் இணை இயக்குனரான நாகராஜ் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டு சொத்து பத்திரங்கள் முக்கிய ஆவணங்களை லோக் அயுக்தா போலீசார் பறிமுதல் செய்து எடுத்து சென்றிருந்தனர்.

இதுபோன்று, தார்வார் டவுன் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் ஏட்டு சிவானந்த மனகர், சிவமொக்கா மாவட்டம் பத்ராவதியில் வனத்துறை அதிகாரியாக இருக்கும் சதீஸ், குடகு மாவட்டம் குசால்நகரில் மூத்த என்ஜினீயராக இருக்கும் ரகுபதி, பெங்களூரு எலகங்கா தாலுகா சிக்கஜாலா கிராம பஞ்சாயத்து உறுப்பினராக இருக்கும் லட்சுமிபதி வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டு இருந்தது.

இவர்களில் லட்சுமிபதிக்கு ரூ.3.95 கோடிக்கு சொத்துகள் இருப்பதாகவும், ரகுபதிக்கு ரூ.3.66 கோடிக்கு சொத்துகள் உள்ளதாகவும் இருப்பதாகவும் லோக் அயுக்தா போலீசார் தெரிவித்துள்ளனர். இன்னும் சில அரசு அதிகாரிகளின் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், சொத்து பத்திரங்கள், வங்கி கணக்குகள் குறித்து பரிசீலனை நடந்து வருவதால், அவர்களது மொத்த சொத்து மதிப்பு தெரியவரவில்லை என்று லோக் அயுக்தா போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கர்நாடகத்தில் நேற்று ஒட்டு மொத்தமாக 14 அரசு அதிகாரிகளின் வீடுகள், உறவினர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டு இருப்பதாகவும், அந்த அதிகாரிகள் தங்களது வருமானத்திற்கு அதிகமாக பல கோடி ரூபாய்க்கு சொத்துகள் சேர்த்து வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் லோக் அயுக்தா போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, 14 அரசு அதிகாரிகள் மீதும் லோக் அயுக்தா போலீசார் தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த அதிகாரிகளிடம் விசாரணை நடத்திவிட்டு, அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளை எடுக்க லோக் அயுக்தா போலீசார் தயாராகி வருகின்றனர்.

ரூ.6 கோடிக்கு தங்கும் விடுதி

கொப்பல் மாவட்டத்தில் நிர்மிதி மையத்தின் என்ஜினீயரான மஞ்சுநாத்திற்கு சொந்தமான வீட்டிலும், குலகி பகுதியில் உள்ள அவருக்கு சொந்தமான தங்கும் விடுதி (லாட்ஜ்) சோதனை நடத்தப்பட்டு இருந்தது. அந்த தங்கும் விடுதி 3 மாடிகளை கொண்டதாகும். தரை தளத்தில் ஓட்டலும் செயல்பட்டு வந்தது. அந்த தனியார் தங்கும் விடுதியின் மதிப்பு மட்டும் ரூ.6 கோடிக்கும் மேல் இருக்கும் என்று லோக் அயுக்தா போலீசார் தெரிவித்துள்ளனர். தங்கும் விடுதியில் நடத்தப்பட்ட சோதனையில் சில முக்கிய ஆவணங்களும் போலீசாருக்கு கிடைத்திருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்