மணிப்பூர் விவகாரம்: 3-வது நாளாக முடங்கியது நாடாளுமன்றம்

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகளின் கடும் அமளியால் 3-வது நாளாக முடங்கியது நாடாளுமன்றம்.

Update: 2023-07-24 10:34 GMT

புதுடெல்லி,

மணிப்பூர் மாநிலத்தில் 2 மாதங்களுக்கு மேலாக வன்முறை சம்பவங்கள் தொடருகின்றன. இதற்கிடையே மணிப்பூரில் 2 குகி பழங்குடியின பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி உள்பட பல்வேறு வீடியோக்கள் தற்போது வெளிவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் மணிப்பூரில் வன்முறைகளை கட்டுப்படுத்த மத்திய அரசு தவறிவிட்டது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. மணிப்பூர் வன்முறை தொடர்பாக பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் விளக்கம் தர வேண்டும் எனவும் அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை எதிர்கொள்ள 26 எதிர்க்கட்சிகள் இணைந்து 'இந்தியா' என்ற புதிய கூட்டணியை உருவாக்கி உள்ளது. இந்த புதிய கூட்டணியின் ஆலோசனை கூட்டம் நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறையில் நடந்தது. இதில் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபடுவது என்று முடிவு செய்யப்பட்டது.

அதன்படி நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்பு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை எதிரே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி, நாடாளுமன்ற இரு அவைகளிலும் விளக்கம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, இது தொடர்பான பேனர்களையும், பதாகைகளையும் கையில் பிடித்தபடி கோஷங்களை எழுப்பினர்.

அதேசமயம் எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பா.ஜ.க. எம்.பி.க்களும் இன்று காலை நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லி, ராஜஸ்தானில் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் மற்றும் குற்றங்களை கண்டித்து பா.ஜ.க. எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர்.

குறிப்பாக ராஜஸ்தானில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வருவதாகவும், அசோக் கெலாட் தலைமையிலான மாநில அரசை உடனடியாக 'டிஸ்மிஸ்' செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். இந்த போராட்டத்தில் பா.ஜ.க. பெண் எம்.பி.க்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

இந்தநிலையில் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகளின் கடும் அமளியால் 3-வது நாளாக முடங்கியது, நாடாளுமன்றம். எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை, மாநிலங்களவை நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

இதனிடையே மழைக்கால கூட்டத்தொடரில் இருந்து, ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை எதிர்த்து, அனைத்து எதிர்க்கட்சிகளும் மாநிலங்களவை அலுவல் குழுக் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்