பெங்களூரு மாநகரில் 'நோ பார்க்கிங்' பகுதியில் நிறுத்தும் வாகனங்களுக்கு பூட்டு - போக்குவரத்து போலீசார் திட்டம்

பெங்களூரு மாநகரில் முக்கிய சாலைகளில் ‘நோ பார்க்கிங்’ பகுதிகளை போலீசார் ஏற்படுத்தி வைத்துள்ளனர். அதாவது வாகன நெரிசலை தவிர்க்க இந்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.;

Update: 2022-08-03 17:13 GMT

பெங்களூரு: பெங்களூரு மாநகரில் முக்கிய சாலைகளில் 'நோ பார்க்கிங்' பகுதிகளை போலீசார் ஏற்படுத்தி வைத்துள்ளனர். அதாவது வாகன நெரிசலை தவிர்க்க இந்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

டொய்ன் வாகனம் ரத்து

இருப்பினும் பல பகுதிகளில் நோ பார்க்கிங் இடங்களில் இருசக்கர வாகனங்களையும், கார்கள், ஆட்டோக்களை நிறுத்தி செல்லும் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதை தடுக்க முன்பு போலீசார், நோ பார்க்கிங் பகுதியில் நிறுத்தும் வாகனங்களை பறிமுதல் செய்து வந்தனர்.

பறிமுதல் செய்யப்படும் வாகனங்களை அவர்கள் டொய்ன் வாகனம் மூலம் இழுத்து சென்று வந்தனர். இதனால் வாகனங்கள் சேதம் அடைந்தன. இதற்கு எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து பெங்களூரு மாநகர போக்குவரத்து போலீசார், நோ பார்க்கிங்கில் நிறுத்தப்படும் வாகனங்களை டொய்ன் மூலம் பறிமுதல் செய்யும் நடவடிக்கையை ரத்து செய்தனர்.

புதிய திட்டம்

இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட பலரும் நோ பார்க்கிங் பகுதிகளில் மீண்டும் வாகனங்களை நிறுத்தி சென்று வருகிறார்கள். இதனால் நகரில் பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே, நோ பார்க்கிங்கில் வாகனங்கள் நிறுத்துவதை தடுக்கவும், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும் பெங்களூரு போக்குவரத்து போலீசார் புதிய முடிவு எடுத்துள்ளனர்.

அதாவது நோ பார்க்கிங்கில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு பூட்டு போட போக்குவரத்து போலீசார் திட்டமிட்டு உள்ளனர். நோ பார்க்கிங் பகுதியில் நிறுத்தி செல்லும் வாகனங்களின் சக்கரங்களில் அந்த டிஜிட்டல் பூட்டுகளை போட்டுவிடுவார்கள்.

தீவிர நடவடிக்கை

இதனால் அந்த வாகனங்களை நகர்த்தி செல்ல முடியாது. உரிய ஆவணங்களை காண்பித்து, அபராதம் கட்டிய பிறகே அந்த பூட்டை போலீசர் திறந்துவிடுவார்கள். இந்த திட்டத்தை அமல்படுத்த போலீசார் தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

நோ பார்க்கிங்கில் நிறுத்தும் வாகனங்களுக்கு பூட்டு போடுவதால் நகரில் வாகன நெரிசல் குறையும் என கருதுகிறோம். இதனால் இந்த திட்டத்தை விரைவில் செயல்படுத்த அரசிடம் அனுமதி கோரி வருவதாகவும் போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்