சிக்கமகளூருவில் ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வட்டார போக்குவரத்து அதிகாரி கைது
மோட்டார் சைக்கிள்களை வாடகைக்கு விட அனுமதி கோரியவரிடம் ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வட்டார போக்குவரத்து அதிகாரியை லோக் அயுக்தா போலீசார் கைது செய்தனர்.
சிக்கமகளூரு-
மோட்டார் சைக்கிள்களை வாடகைக்கு விட அனுமதி கோரியவரிடம் ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வட்டார போக்குவரத்து அதிகாரியை லோக் அயுக்தா போலீசார் கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக இருந்த உதவியாளரும் சிக்கி உள்ளார்.
ரூ.8 ஆயிரம் லஞ்சம்
சிக்கமகளூரு வட்டார போக்குவரத்து அதிகாரியாக இருப்பவர் மதுரா. அங்கு உதவியாளராக லதா என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், சிக்கமகளூரு கெம்பனஹள்ளியை சேர்ந்த பிரகாஷ் என்பவர், தனக்கு சொந்தமான 8 மோட்டார் சைக்கிள்களை வாடகைக்கு விட அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் விண்ணப்பம் செய்திருந்தார்.
அந்த விண்ணப்பத்தை பரிசீலனை செய்த மதுரா, ஒரு மோட்டார் சைக்கிளுக்கு ரூ.1,000 வீதம் 8 மோட்டார் சைக்கிளுக்கு ரூ.8 ஆயிரம் லஞ்சம் வழங்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.
லோக் அயுக்தாவில் புகார்
ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத பிரகாஷ், இதுகுறித்து லோக் அயுக்தா போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து லோக் அயுக்தா போலீசார், பிரகாசிற்கு சில அறிவுரைகளை கூறினர். அதன்பேரில் பிரகாஷ், வட்டார போக்குவரத்து அதிகாரி மதுராவை தொடர்பு கொண்டு ஒரு மோட்டார் சைக்கிளுக்கு ரூ.500 வீதம் ரூ.4 ஆயிரம் கொடுப்பதாக கூறினார். இதற்கு அவரும் சம்மதித்தார்.
இதையடுத்து நேற்று முன்தினம் பிரகாஷ், வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு சென்று உதவியாளர் லதாவிடம் ரசாயனம் தடவிய ரூ.4 ஆயிரத்தை கொடுத்தார். அந்த பணத்தை லதா வாங்கினார்.
கைது
அப்போது அங்கு மறைந்து இருந்த லோக் அயுக்தா போலீசார் லதாவை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். பின்னர் வட்டார போக்குவரத்து அதிகாரி மதுராவையும் லோக் அயுக்தா போலீசார் கைது செய்தனர். கைதான 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.