கர்நாடக பட்ஜெட்: மதுபானம் விலை உயருகிறது
முதல்-மந்திரி சித்தராமையா நடப்பு 2023-24-ம் ஆண்டுக்கான கர்நாடக பட்ஜெட்டை தாக்கல் செய்தார். வரிகள் உயர்த்தப்பட்டுள்ளதால் மதுபானம் விலை அதிகரிக்கிறது.
பெங்களூரு:
கர்நாடகத்தில் முன்பு முதல்-மந்திரியாக இருந்த பசவராஜ் பொம்மை தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வந்தது. அவர் 2023-24-ம் ஆண்டுக்கான கர்நாடக பட்ஜெட்டை கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் அமலுக்கு வருவதற்குள் கர்நாடக சட்டசபைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததை அடுத்து பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை அமல்படுத்தவில்லை.
இந்த நிலையில் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி கடந்த மே மாதம் 20-ந் தேதி அமைந்தது. அதைத்தொடர்ந்து முதல்-மந்திரி சித்தராமையா, கர்நாடக அரசு நடப்பு 2023-24-ம் ஆண்டுக்கான பட்ஜெட் (நிதிநிலை அறிக்கை) ஜூலை 7-ந் தேதி (அதாவது நேற்று) தாக்கல் செய்யப்படும் என்று அறிவித்தார்.
அதன்படி சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 3-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் நாளில் சட்டசபையின் கூட்டுக் கூட்டத்தில் கவர்னர் தாவர்சந்த் கெலாட் உரையாற்றினார். இந்த நிலையில் கர்நாடக சட்டசபை நேற்று பகல் 12 மணிக்கு கூடியது. நிதித்துறையை தன்வசம் வைத்துள்ள முதல்-மந்திரி சித்தராமையா, 2023-24-ம் ஆண்டுக்கான கர்நாடக பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இது சித்தராமையாவின் 14-வது பட்ஜெட் ஆகும்.
இந்த பட்ஜெட் அளவு ரூ.3 லட்சத்து 27 ஆயிரத்து 747 கோடியை கொண்டது. பட்ஜெட் வரவு ரூ.3 லட்சத்து 24 ஆயிரத்து 478 கோடி ஆகும். வரவை விட செலவு அதிகமாக இருப்பதால் இது வருவாய் பற்றாக்குறை பட்ஜெட் ஆகும். இதில் முக்கியமாக கலால் வரி அதாவது பீர் மீது 10 சதவீதமும், 18 வகையான பிராந்தி விலை 20 சதவீதமும் உயர்த்தப்பட்டுள்ளது. அதே போல் நில வழிகாட்டி மதிப்பும் உயா்த்தப்படுகிறது. இதனால் பத்திரப்பதிவு கட்டணம் அதிகரிக்கும்.
அது எந்த அளவுக்கு உயருகிறது என்பதை குறிப்பிடவில்லை. மோட்டார் வாகன வரியும் அதிகரிக்கப்படுகிறது. இதற்காக மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் செய்யப்பட உள்ளது. இவற்றை தவிர பிற வரிகள் எதுவும் உயர்த்தப்படவில்லை. அதே போல் காங்கிரஸ் அரசின் 5 உத்தரவாத திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பெங்களூருவுக்கு சுமார் ரூ.45 ஆயிரம் கோடி அளவுக்கு பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 3-வது கட்ட மெட்ரோ ரெயில் திட்டம், இந்த ஆண்டு நிறைவடையும் மெட்ரோ ரெயில் பாதைகள் போன்ற விஷயங்கள் இடம் பெற்றுள்ளன. அதே நேரத்தில் குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு புதிய திட்டங்களும், வரி சலுகைகள் பற்றி அறிவிக்கப்படவில்லை. பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளள முக்கிய அம்சங்கள் வருமாறு:-
* சக்தி திட்டத்தால் அரசு பஸ்களில் தினமும் 50 லட்சம் முதல் 60 லட்சம் பெண்கள் பயன் அடைகிறார்கள்.
* கிரகபாக்ய திட்டத்தின் கீழ் இலவச மின்சார திட்டத்திற்கு ஆண்டுக்கு ரூ.13 ஆயிரத்து 910 கோடி செலவாகும்.
* கிரகலட்சுமி திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் திட்டத்திற்கு ஆண்டுக்கு ரூ.30 ஆயிரம் கோடி செலவாகும்.
* அன்ன பாக்ய திட்டத்தின் கீழ் ஏழை மக்களுக்கு கூடுதலாக 5 கிலோ அரிசி வழங்குவதற்கு பதிலாக பணம் வழங்கும் திட்டத்திற்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் கோடி செலவாகும்.
* கிருஷி பாக்ய திட்டத்திற்கு ரூ.100 கோடி நிதி ஒதுக்கப்படும்.
* விவசாய உபகரணங்கள் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் நோக்கத்தில் ரூ.50 கோடி செலவில் 100 உயர்தரமான உபகரணங்கள் மையம் அமைக்கப்படும்.
* புவிசார் குறியீடு கொண்டுள்ள காபி, மைசூரு மல்லிகை, நஞ்சன்கூடு ரஸ்தாலி வாழைப்பழம் போன்ற பொருட்களுக்கு "பிராண்டிங்" ஏற்படுத்தி அதற்கு சந்தை வாய்ப்புகளை உருவாக்கி கொடுக்கப்படும்.
* பட்டுநூல் உற்பத்தியாளர்களுக்கு ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும்.
* கால்நடைகள் எதிர்பாராத விதமாக இறக்க நேரிட்டால், அவற்றுக்கு நிவாரணம் வழங்கும் அனுகிரகா திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும்.
* மீனவ பெண்களுக்கு வங்கிகளில் வழங்கப்படும் வட்டியில்லா கடன் ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப்படும்.
* மீனவர்களின் படகுகளுக்கு டீசல் மானியம் வழங்க ரூ.250 கோடி நிதி ஒதுக்கப்படும்.
* மீனவர்களின் படகுகளை மண்எண்ணெய் என்ஜினில் இருந்து பெட்ரோல் என்ஜின்களாக மாற்ற தலா ரூ.50 ஆயிரம் மானியம் வழங்கப்படும்.
* விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும்.
* 3 சதவீத வட்டியில் வட்டியில்லா கடன் ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.15 லட்சமாக அதிகரிக்கப்படுகிறது.
* ரூ.20 லட்சம் வரை கிடங்குகள் அமைக்க 7 சதவீதம் வரை வட்டி மானியம் வழங்கப்படும்.
* மேகதாது அணை திட்டத்திற்கு தேவையான வன நிலம் மற்றும் பிற நிலங்களை கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
* ரூ.770 கோடியில் 899 ஏரிகளில் நீர் நிரப்பும் திட்டம் அமல்படுத்தப்படும்.
*்எத்தினஒலே குடிநீர் திட்ட பணிகள் விரைவாக முடிக்கப்படும்.
* கே.சி.வேலி, எச்.என்.வேலி 2-வது திட்டத்தின் கீழ் கோலார், சிக்பள்ளாப்பூர் மாவட்டங்களில் ரூ.529 கோடி செலவில் 296 ஏரிகளில் நீர் நிரப்பும் திட்டம் அமல்படுத்தப்படும்.
* 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வாரத்தில் 2 நாட்கள் கோழி முட்டை வழங்கப்படும்.
* பி.எச்.டி. ஆராய்ச்சி படிப்புகளுக்கான சேர்க்கை கலந்தாய்வு மூலம் நடத்தப்படும்.
* மூளை சுகாதார பாதுகாப்பு திட்டத்தை அமல்படுத்த ரூ.25 கோடி நிதி ஒதுக்கப்படும்.
* அனைத்து மாவட்ட அரசு ஆஸ்பத்திரிகளில் சி.டி.ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் வசதி ஏற்படுத்தப்படும்.
* நடிகர் புனித்ராஜ்குமார் நினைவாக, மாரடைப்பால் ஏற்படும் இறப்புகளை தடுக்கும் நோக்கத்தில் மாவட்ட-தாலுகா ஆஸ்பத்திரிகளில் நவீன உபகரணஙகள் வைக்கப்படும்.
* ராமநகர் மாவட்டம் கனகபுராவில் புதிதாக ஒரு மருத்துவ கல்லூரி தொடங்கப்படும்.
* பொன்விழாவையொட்டி பெங்களூருவில் உள்ள கித்வாய் அரசு புற்றுநோய் ஆஸ்பத்திரிக்கு ரூ.20 கோடி நிதி உதவி வழங்கப்படும்.
* நிமான்ஸ் ஆஸ்பத்திரி வளாகத்தில் ரூ.146 கோடி செலவில் உடல் உறுப்புகள் மாற்று அறுவை சிகிச்சை செய்யும் ஆஸ்பத்திரி அமைக்கப்படும். மேலும் அங்கு ஒரு 'பைபரோஸ்கேன்' ஆய்வகம் அமைக்கப்படும்.
* தலித் மற்றும் பழங்குடியின மக்களின் மேம்பாட்டிற்கு ரூ.34 ஆயிரத்து 294 கோடி நிதி ஒதுக்கப்படும்.
* நாடோடி மக்களின் மேம்பாட்டிற்கு ரூ.50 கோடி நிதி ஒதுக்கப்படும்.
* பிற்படுத்தப்பட்ட பிரிவுகளில் பிரிவு-1, 2ஏ-வில் உள்ள சமூகங்களுக்கு ரூ.1 கோடி வரையிலான அரசு திட்ட டெண்டர்களில் இட ஒதுக்கீடு வழங்கப்படும்.
* சிறுபான்மையின மாணவர்கள் வெளிநாடுகள் கல்வி பயில தலா ரூ.20 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும்.
* பணிகள் முடங்கியுள்ள சிறுபான்யைினருக்கான 126 ஷாதி மஹால், சமுதாய பவன்கள் கட்டுமான பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள ரூ.54 கோடி நிதி ஒக்கப்படும்.
* இந்து அல்லாத பிற மதங்களின் ஆன்மிக தலங்களுக்கு வழங்கப்படும் தஸ்திக் நிதி ரூ.60 ஆயிரமாக உயர்த்தப்படும்.
* கிறிஸ்துவ மேம்பாட்டு வாரியம் அமைக்கப்பட்டு அதற்கு ரூ.100 கோடி நிதி ஒதுக்கப்படும்.
* வீட்டு வசதி திட்டங்களின் கீழ் 3 லட்சம் வீடுகள் கட்டுமான பணிகள் ரூ.2 ஆயிரத்து 450 கோடி செலவில் செய்து முடிக்கப்படும்.
* ஏழைகளுக்கு 5 கிலோ அரிசியுடன் கூடுதலாக 5 கிலோ அரிசி வழங்கப்படும். கூடுதல் அரிசி கிடைக்கும் வரை ஏழை குடும்பங்களுக்கு தலா ரூ.170 பணம் வழங்கப்படும்.
* சமோட்டா, ஸ்விக்கி போன்ற நிறுவனங்களில் உணவு வினியோக பணிகளில் ஈடுபட்டு்ளள தொழிலாளர்களுக்கு ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் ஆயுள் மற்றும் விபத்து காப்பீட்டு வசதி செய்யப்படும்.
* ரூ.100 கோடியில் 100 ஆண்டுகளை கடந்த 12 தொழில் பயிற்சி நிறுவனங்கள் தரம் உயர்த்தப்படும்.
* 25 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு ஏற்படுத்தப்படும்.
* 400 கிராம பஞ்சாயத்துகளில் குழந்தைகள் பராமரிப்பு மையம் ஆரம்பிக்கப்படும்.
* கல்யாண-கர்நாடக பகுதியில் ரூ.5 ஆயிரம் கோடி மதிப்பீட்டிலான பணிகள் மேற்கொள்ளப்படும்.
* பின்தங்கிய தாலுகாக்களுக்கு ரூ.3 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படும்.
* பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, திடக்கழிவு மேலாண்மை, பொதுமக்கள், விலங்குகள் சுகாதாரம், நீர் பாதுகாப்பு, வெள்ள நிர்வாகம் போன்ற பணிகளை சிறப்பாக மேற்கொண்டு பெங்களூரு உலக தரத்திற்கு மேம்படுத்தப்படும்.
* பெங்களூருவில் 97 லட்சம் டன் குப்பை கழிவுகளை நிர்வகிக்க ரூ.256 ஏக்கர் நிலம் ஒதுக்கப்படும்.
* பையப்பனஹள்ளியில் புதிதாக கட்டப்பட்டுள்ள சர் எம்.விஸ்வேசுவரய்யா ரெயில் முனையத்திற்கு தொடர்பு வசதியை ஏற்படுத்த ரூ.263 கோடியில் மேம்பாலம் கட்டப்படும்.
* பெங்களூருவில் ரூ.800 கோடி செலவில் 100 கிலோ மீட்டர் தூரத்திற்கு கான்கிரீட் சாலைகள் அமைக்கப்படும்.
* ரூ.273 கோடியில் அதிக வாகன நெரிசல் உள்ள 83 கிலோ மீட்டர் சாலை மேம்படுத்தப்படும்.
* அடுத்த 3 ஆண்டுகளில் பெங்களூருவில் மெட்ரோ ரெயில் சேவை 70 கிலோ மீட்டரில் இருந்து 170 கிலோ மீட்டராக அதிகரிக்கப்படும்.
* சர்வதேச விமான நிலைய மெட்ரோ ரெயில் திட்ட பணிகள் வருகிற 2026-ம் ஆண்டுக்குள் நிறைவு செய்யப்படும்.
* 3-வது கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்தின் கீழ் ரூ.15 ஆயிரம் கோடியில் ஹெப்பால் முதல் சர்ஜாப்புரா வரை மெட்ரோ ரெயில் பாதை அமைக்கப்படும்.
* மைசூருவில் திரைப்பட நகரம் நிறுவப்படும்.
* பெங்களூருவில் புதிதாக 5 போக்குவரத்து போலீஸ் நிலையங்கள், 6 மகளிர் போலீஸ் நிலையங்கள் அமைக்கப்படும்.
* வணிக வரித்துறையில் அதிக வரி செலுத்துகிறவர்களின் வசதிக்காக தனியாக ஒரு பிரிவு ஏற்படுத்தப்படும்.
* வணிக வரித்துறை வரி வசூல் ரூ.ஒரு லட்சத்து 1,000 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
* கலால் வரி வசூல் இலக்கு ரூ.36 ஆயிரம் கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
* பத்திரப்பதிவு கட்டணம் அதாவது முத்திரைத்தாள் வரி வசூல் இலக்கு ரூ.25 ஆயிரம் கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
* மோட்டார் வாகன வரி வசூல் இலக்கு ரூ.11 ஆயிரத்து 500 கோடியாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.
* கனிம வரி வசூல் ரூ.9 ஆயிரம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
2.50 மணி நேரம் பட்ஜெட் உரையை வாசித்த சித்தராமையா
கர்நாடக சட்டசபை 12 மணிக்கு கூடும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி சபை கூடியது. ஆனால் முதல்-மந்திரி சித்தராமையா பட்ஜெட் தாக்கல் செய்யும் பணியை 5 நிமிடங்கள் தாமதமாக 12.05 மணிக்கு தொடங்கினார். அதைத்தொடர்ந்து அவர் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். தான் சூட்கேசில் கொண்டு வந்த பட்ஜெட் புத்தகத்தை எடுத்து மேசை வைத்து புத்தக்தை வாசிக்கத் தொடங்கினார். இந்த பட்ஜெட் புத்தகம் 112 பக்கங்களை கொண்டது ஆகும். சித்தராமையா தனது பட்ஜெட் உரையை 12.55 மணிக்கு நிறைவு செய்தார். அவர் 2.50 மணி நேரம் எந்த தடையும் இன்றி, தண்ணீர் கூட குடிக்காமல் புத்தகத்தை வாசித்து நிறைவு செய்தார். அந்த உரை முடிவடைந்ததும் மந்திரிகள், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சித்தராமையாவுக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தனர்.
கருப்பு கோட்-சூட்டில் வந்த சபாநாயகர்
சபாநாயகர் யு.டி.காதர் சரியாக 12 மணிக்கு சபைக்கு வந்தார். அவர் கருப்பு கோட்டு-சூட்டு அணிந்து சபைக்கு வந்தார். அவரை இந்த உடையில் பார்த்ததும் பா.ஜனதா உறுப்பினர்கள் கரவொலி எழுப்பு ஆடை நன்றாக உள்ளதாக கூறினர். அதைத்தொடர்ந்து பா.ஜனதா உறுப்பினர்கள் தங்களின் இருக்கைகளில் அமர்ந்தனர். எம்.எல்.ஏ.க்களுக்கான நூலக அறையில் பத்திரிகையாளர்கள் நீண்ட வரிசையில் நின்று பட்ஜெட் புத்தகத்தை பெற்றுச் சென்றனர். ஒவ்வொருவருக்கும் இரண்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன.