"இந்திரா காந்தியைப் போல...": - மம்தா பானர்ஜிக்கு மிரட்டல் விடுத்த மாணவர் கைது

பெண் டாக்டர் பலாத்கார வழக்கை போலீசார் சரியாக கையாளவில்லை என்று மம்தா பானர்ஜி மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

Update: 2024-08-19 12:04 GMT

கோப்புப்படம்

கொல்கத்தா,

கொல்கத்தாவில் ஆர்.ஜி.கார் அரசு மருத்துவமனையில் இரவு பணியில் இருந்த முதுநிலை பெண் பயிற்சி டாக்டர் கடந்த 9-ந்தேதி ஆடிட்டோரியத்தில் பிணமாக மீட்கப்பட்டார். அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது பிரேதப் பரிசோதனையில் தெரிய வந்தது.

இந்த கொலை தொடர்பாக போலீசில் தன்னார்வ தொண்டராக பணியாற்றிய சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார். இந்த சம்பவம் டாக்டர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இச்சம்பவத்தை போலீசார் சரியாக கையாளவில்லை என்று மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

பெண் டாக்டர் படுகொலை செய்யப்பட்ட வழக்கை தற்போது சி.பி.ஐ, கொல்கத்தா ஐகோர்ட்டு விசாரித்து வருகிறது. இந்த சூழலில் சுப்ரீம் கோர்ட்டும் இவ்வழக்கை கையில் எடுத்துள்ளது. இதனிடையே சமூக வலைதளங்களில் மேற்கு வங்காள அரசுக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று கீர்த்தி சர்மா என்ற பி.காம் மாணவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டு இருக்கும் பதிவு சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அதில் இந்திரா காந்தியை போன்று மம்தா பானர்ஜியை சுட்டுக்கொலை செய்யவேண்டும் என்றும், உங்களால் அதை செய்ய முடியாவிட்டாலும், வருத்தப்படமாட்டேன்'' என்று குறிப்பிட்டு இருந்தார். அதோடு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண் டாக்டரின் புகைப்படத்தையும் பகிர்ந்திருந்தார்.

சட்டப்படி பாலியல் வன்கொடுமை செய்யப்படும் பெண்களின் அடையாளத்தையோ அல்லது புகைப்படத்தையோ வெளியிடுவது குற்றமாகும். கீர்த்தி சோசியல் என்ற பெயரில் அப்பதிவு வெளியாகி இருந்தது. அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து மம்தா பானர்ஜிக்கு எதிராக பதிவிட்ட மாணவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்