எல்.ஐ.சி பங்குகள் பத்தாவது நாளாக தொடர்ந்து சரிவு!

எல்ஐசி பங்குகள் இன்று பத்தாவது நாளாக தொடர்ந்து வீழ்ச்சியடைந்து கிட்டத்தட்ட 6 சதவீதம் சரிந்தன.;

Update: 2022-06-13 16:36 GMT

மும்பை,

எல்ஐசி நிறுவன பங்குகள், பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நாளில் இருந்து, தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. ஏற்கெனவே சரிவு கண்டு வரும் எல்ஐசி நிறுவனத்தின் பங்குகள் இன்று மேலும் சரிவு கண்டது.

இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (எல்ஐசி) பங்குகள் இன்று பத்தாவது நாளாக தொடர்ந்து வீழ்ச்சியடைந்து கிட்டத்தட்ட 6 சதவீதம் சரிந்தன. ஒரு மாதத்தில், 25 சதவீதம் நஷ்டத்தை, இந்த நிறுவன பங்குகளில் முதலீடு செய்த முதலீட்டாளர்கள் அடைந்துள்ளனர். இன்று ஜூன் 13 –ம் தேதி, எல்ஐசி பங்கு விலை சுமார் 3 சதவீதம் இறங்கி ரூ.681-க்கு வந்தது.

எல்ஐசி நிறுவனத்தின் பங்கு விலை, அதன் பங்கு வெளியீட்டின் போது ரூ.949 ஆக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட ஒரு மாத காலத்தில் அதன் பங்கு விலை, நாள் தோறும் குறைந்து, சென்ற வார இறுதியில் ரூ.710 என்ற நிலையில் இறங்கி வர்த்தகமானது.

எல்.ஐ.சி நிறுவனத்தின் மதிப்பு, பங்கு வெளியீட்டின் போது ரூ.6.02 லட்சம் கோடியாக இருந்தது. தொடர் சரிவு காரணமாக அதன் மதிப்பு ரூ.1.40 லட்சம் கோடி குறைந்திருக்கிறது. ஒரு மாத காலத்தில் ரூ.1.4 லட்சம் கோடி மதிப்பை அந்த நிறுவனம் இழந்திருப்பது மிகவும் கவலை கொள்ளும் விஷயமாக இருக்கிறது. பங்குச் சந்தை தொடர் சரிவும், எல்ஐசி பங்கு விலை சரிவுக்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது.

இதுகுறித்து தற்போது கருத்து தெரிவித்துள்ள மத்திய அரசின் முதலீடு மற்றும் பொது சொத்து மேலாண்மை துறை செயலாளர், எல்ஐசி நிறுவனத்தின் பங்கு வீழ்ச்சி தற்காலிகமானது என்றும் விரைவில் இந்த நிலை மாறும்; முதலீட்டாளர்களின் மதிப்பை உயர்த்தும் முயற்சியில், எல்ஐசி நிர்வாகம் செயல்படும் எனவும் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்