நெருக்கடி நிலையின்போது ஏற்பட்ட இருண்ட காலம் பற்றி மறந்து விட கூடாது: பிரதமர் மோடி

நெருக்கடி நிலையின்போது ஏற்பட்ட இருண்ட காலம் பற்றி வருங்கால தலைமுறைகள் உள்பட இந்தியர்கள் மறந்து விட கூடாது என பிரதமர் மோடி இன்று பேசியுள்ளார்.

Update: 2022-06-26 07:55 GMT



முனிச்,



பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2014ம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்றது முதல் மனதின் குரல் (மன் கி பாத்) என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதம்தோறும் கடைசி ஞாயிற்று கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.

அவர் 2வது முறையாக பிரதமராக பொறுப்பேற்ற பின்னரும் அது தொடருகிறது. அதன்படி, இந்த மாதத்திற்கான மனதின் குரல் (மன் கி பாத்) வானொலி நிகழ்ச்சி இன்று காலை 11.00 மணிக்கு தொடங்கியது. இது 90வது மனதின் குரல் நிகழ்ச்சியாகும்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, நாடு சுதந்திரம் பெற்ற 75வது ஆண்டு கொண்டாட்டத்தில் இன்று இருக்கும்போது, நெருக்கடி நிலையின்போது ஏற்பட்ட இருண்ட காலம் பற்றி நாம் மறந்து விட கூடாது. வருங்கால தலைமுறைகளும் கூட இதனை மறந்து விட கூடாது.

1975ம் ஆண்டு நெருக்கடி நிலை ஜூன் மாதத்தில் அமலானபோது, குடிமக்களின் அனைத்து உரிமைகளும் பறிக்கப்பட்டன. இதில், அரசியல் சாசனத்தின் பிரிவு 21ன் கீழ் வர கூடிய, உத்தரவாதம் அளிக்கப்பட்ட தனிநபர் சுதந்திரம் மற்றும் வாழ்வதற்கான உரிமை ஆகியவையும் அடங்கும்.

அந்த தருணத்தில், இந்தியாவில் ஜனநாயகம் நசுக்கப்பட கூடிய முயற்சிகளும் நடந்தன. நாட்டின் நீதிமன்றங்கள், ஒவ்வொரு அரசியல் சாசன அமைப்பும், பத்திரிகை என ஒவ்வொரு விசயமும் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டன என கூறியுள்ளார்.

ஒப்புதல் இன்றி எதுவும் பிரசுரிக்க முடியாது என்ற காலம் இருந்தது. இருந்தபோதும், ஜனநாயகம் மீது இருந்த இந்தியர்களின் நம்பிக்கையை அசைக்க முடியவில்லை. அந்த ஜனநாயக நடைமுறைப்படி மட்டுமே, நெருக்கடி நிலையில் இருந்து மக்கள் வெளியே வந்தனர். ஜனநாயகம் மீட்டெடுக்கப்பட்டது என பேசியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்