மனதின் குரல் 100-வது அத்தியாயத்தை இணைந்து கொண்டாடுவோம் - ஜே.பி.நட்டா

நாட்டை ஒன்றுபடுத்தி வரும் பிரதமர் நரேந்திர மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சி தனது 100-வது அத்தியாயம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நிறைவு செய்கிறது.;

Update: 2023-04-29 16:17 GMT

அந்தவகையில், நமது நாட்டின் வரலாற்றில் இதுவொரு சிறப்பான நாளாகும். 2014-ம் ஆண்டு அக்டோபர் 3-ந்தேதி முதல் ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையும் காலை 11 மணிக்கு ஒலிபரப்பாகி வரும் இந்த வானொலி நிகழ்ச்சி மிகுந்த வரவேற்பை பெற்று, நாட்டில் பேசுபொருளாகி இருக்கிறது. பிரதமரின் எண்ணங்கள், அவரது கருத்துகள், அறிவுசார்ந்த சொற்கள், மக்களின் விருப்பங்களையும், நம்பிக்கையையும் பிரதிபலிக்கின்றன.

அனைத்து பிரிவுகளையும் சேர்ந்த மக்கள், தங்களது இல்லங்களிலும், கடைகளிலும், தெருக்களிலும் வானொலி பெட்டிகளிலிருந்து வரும் சுவையான தகவல்கள், இந்தியாவை பற்றிய கதைகளை தெரிந்துகொள்ள ஆர்வத்துடன் கூடுவதையும், மக்களிடையே இந்த நிகழ்ச்சி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளதையும் கண்டுவருகிறேன். உண்மை கதைகள், அறியப்படாத நாயகர்களின் கதைகளால் ஈர்க்கப்பட்டுள்ள மக்கள், நாட்டுக்கும், நமது சமுதாயத்துக்கும் தொண்டாற்ற தங்களை மறுஅர்ப்பணம் செய்து வருகின்றனர்.

கடந்த 9 ஆண்டுகளாக, சுற்றுச்சூழலை பாதுகாத்தல் நமது செழுமையான கலை, கலாசாரம், பாரம்பரியத்தை பாதுகாத்தல், சமூக இயக்கங்களை முறைப்படுத்துதல், தேவைப்படும் மற்றும் ஆதரவற்ற மக்களுக்கு உதவுதல், விளையாட்டுகள், அறிவியல் பண்பு, இலக்கியம், கல்வியை மேம்படுத்துதல், அழிந்து வரும் குடிசைத்தொழில்கள் மற்றும் தனித்துவமான கலை வடிவங்களுக்கு புத்துயிரூட்டல், சமூக நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டை ஊக்குவித்தல் என நமது நாட்டை கட்டமைப்பதில் சாதாரண மக்களின் மகத்தான பங்களிப்பை மோடி இதன்மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.

டிஜிட்டல் புரட்சி யுகத்தில் தனது இருப்பை இழந்து வரும் சாதாரண தகவல் ஊடகத்தை எவ்வாறு மக்களை ஈர்க்கும் வகையில் ஆற்றல் வாய்ந்ததாக மாற்றுவது என்பதற்கு மனதின் குரல் ஒரு தனித்துவமான உதாரணமாகும். மோடி மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் நாட்டுக்கு உரையாற்றும்போது மக்களிடையே அற்புதமான தாக்கத்தை களத்தில் காணமுடிவது இதன் வெற்றிக்கு எடுத்துக்காட்டாகும். மக்களுடன் கலந்துரையாடுவதற்கு தலைப்புகளை மோடி தேர்வு செய்வது மனதின் குரல் நிகழ்ச்சியின் தனித்துவமாகும்.

மனதின் குரல் நிகழ்ச்சி இந்தியாவில் மட்டுமல்லாமல், வெளிநாடுகளிலும் பெரும் புகழ் பெற்றுள்ளது. தற்போது 11 வெளிநாட்டு மொழிகளில் ஒலிபரப்பாகும் மனதின் குரல் உலகளவில் நேசிக்கப்படுகிறது. 100 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் இதுவரை மனதின் குரல் நிகழ்ச்சியை கேட்டுள்ளனர். இதில் 60 சதவீதத்தினர் நாட்டு நிர்மாணத்தில் பணியாற்ற தாங்களாகவே உறுதி எடுத்துக்கொண்டுள்ளனர். மனதின் குரல் நிகழ்ச்சியை கேட்க மக்கள் எவ்வாறு ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர் என்பதை, ஒவ்வொரு அத்தியாயத்தையும் சராசரியாக 23 கோடி பேர் கேட்பதன் மூலம் அறியலாம். மனதின் குரல் நிகழ்ச்சி நமது சமுதாயத்தில் நேர்மறையான தாக்கத்தை கொண்டுவந்துள்ளது. இது மிகப்பெரிய பங்களிப்பாகும். இந்த புகழ்மிக்க நிகழ்ச்சியை கேட்கும்போது, ஒரு பாதுகாவலராக, குடும்பத்தின் தலைவர் வழிநடத்துபவராக, பிரகாசமான சிறந்த எதிர்காலத்தை காட்டுபவராக பிரதமரை உணரலாம். இந்த தகவல் ஊடகம் மேலும் வலுவடைந்து நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு முக்கியமான தூண்டுகோலாக அமையும் என்று உறுதியாக நம்புகிறேன். நாம் அனைவரும் இணைந்து மனதின் குரல் 100-வது அத்தியாயத்தை கொண்டாடுவதுடன் நமது வாழ்க்கையின் முக்கியமான தருணத்தை வளப்படுத்துவோம். நமது பிரதமர் காட்டுகின்ற வழியை பின்பற்றி நமது நாட்டுக்கு தொண்டாற்ற நம்மை அர்ப்பணித்துக்கொள்ளவும், ஒன்று சேர்ந்து உறுதி எடுத்துக்கொள்ளவும் இது சரியான தருணமாகும்.

Tags:    

மேலும் செய்திகள்