வாக்காளர்கள் அச்சமின்றி ஓட்டுப்போட தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் கலெக்டர் செல்வமணி பேட்டி

சிவமொக்கா மாவட்டத்தில் வாக்காளர்கள் அச்சமின்றி ஓட்டுப்போட தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதாக கலெக்டர் செல்வமணி கூறினார்.

Update: 2023-05-09 18:45 GMT

சிவமொக்கா-

சிவமொக்கா மாவட்டத்தில் வாக்காளர்கள் அச்சமின்றி ஓட்டுப்போட தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதாக கலெக்டர் செல்வமணி கூறினார்.

இன்று ஓட்டுப்பதிவு

கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு இன்று (புதன்கிழமை) நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் தேர்தல் ஆணையம் தயார் நிலையில் வைத்துள்ளது. தேர்தலையொட்டி நேற்று காலையில் சிவமொக்கா மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான செல்வமணி தனது அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தேர்தலுக்காக சிவமொக்கா மாவட்டத்தில் 1,782 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. மொத்தம் 14.72 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெற இருக்கிறது. வாக்காளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு சென்று ஓட்டுப்போட வேண்டும்.

பாதுகாப்பு ஏற்பாடுகள்

வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வாக்குச்சாவடிகளில் போடப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் தேர்தல் பணிக்காக 240 பஸ்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. மாவட்டத்தில் 5 தொகுதிகளில் ஆண்களைவிட பெண் வாக்காளர்களே அதிகமாக உள்ளனர். அந்த தொகுதிகள் சிவமொக்கா புறநகர், சிவமொக்கா நகர், பத்ராவதி, தீர்த்தஹள்ளி, சாகர் ஆகிய தொகுதிகள் ஆகும்.

வாக்காளர்களுடன் கைக்குழந்தை செல்லலாம். பார்வை இழந்த அல்லது மாற்றுத்திறனாளிகளுடன் ஒரு உதவியாளர் செல்லலாம். ஆனால் அவர் வாக்குச்சாவடியில் பணியாற்றும் ஊழியராக இருத்தல் வேண்டும். ஓட்டுப்பதிவையொட்டி மாவட்டத்தில் உள்ள ஜோக் நீர்வீழ்ச்சி, தாவரேகொப்பா உயிரியல் பூங்கா, தீர்த்தஹள்ளி தாலுகாவில் உள்ள குவெம்பு அருங்காட்சியகம், சாகர் தாலுகாவில் உள்ள புகழ்பெற்ற சிக்கந்தூர் சவுடேஸ்வரி கோவில் உள்ள அனைத்து முக்கிய கோவில்கள் மற்றும் சுற்றுலா தலங்களுக்கு பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

ஓட்டு எண்ணிக்கை

சிவமொக்கா மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு தொகுதிக்கும் வாக்கு எண்ணும் மையங்கள் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி சிவமொக்கா புறநகர் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சிவமொக்கா டவுனில் உள்ள எச்.எஸ். ருத்ரப்பா தேசிய பி.யூ. அரசு கல்லூரியில் வைக்க வேண்டும். அங்கு தான் வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும்.

அதுபோல் பத்ராவதிக்கு சஞ்சி ஒன்னம்மா பி.யூ. அரசு கல்லூரியும், சிவமொக்கா நகர் தொகுதிக்கு சகாயாத்ரி அரசு வணிகவியல் கல்லூரியும், தீர்த்தஹள்ளி தொகுதிக்கு யூ.ஆர். அனந்த மூர்த்தி அரசு கல்லூரியும், சிகாரிப்புரா தொகுதிக்கு அரசு முதல்தர கல்லூரியும், சாகர் தொகுதிக்கு அங்குள்ள அரசு பி.யூ. கல்லூரியும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஓட்டு எண்ணிக்கை வருகிற 13-ந் தேதி நடைபெறும்

இவ்வாறு கலெக்டர் செல்வமணி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்