கொரோனா பாதுகாப்பு விதிகளை மீறும் விமான பயணிகளை கீழே இறக்கி விடுங்கள்; டி.ஜி.சி.ஏ. உத்தரவு

விமானங்களில் கொரோனா பாதுகாப்பு விதிகளை முறையாக கடைப்பிடிக்காத பயணிகளை கீழே இறக்கி விடுங்கள் என டி.ஜி.சி.ஏ. உத்தரவிட்டு உள்ளது.;

Update: 2022-06-09 01:32 GMT



புதுடெல்லி,



நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சமீப நாட்களாக சற்று அதிகரித்து வருகிறது. இதனை முன்னிட்டு பொது இடங்களில் மக்கள் மேற்கொள்ள வேண்டிய கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை முறையாக கடைப்பிடிக்க வலியுறுத்தப்படுகிறது.

இதன்படி, விமான பயணிகள் கைகளை சுத்தமுடன் வைத்திருத்தல், முக கவசங்களை அணிதல் உள்ளிட்ட பயணத்தின்போது மேற்கொள்ள வேண்டிய கொரோனா பாதுகாப்பு கட்டுப்பாடுகளை முறையாக கடைப்பிடிக்கும்படி தொடர்ந்து அறிவுறுத்தப்படுகிறது.

இதேபோன்று, கடந்த 3ந்தேதி, விமான நிலையங்களில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் சரியாக அமல்படுத்தப்படுவது பற்றி விமான போக்குவரத்து இயக்குனரகம் (டி.ஜி.சி.ஏ.) உறுதி செய்ய வேண்டும் என டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

இதனை தொடர்ந்து விமான போக்குவரத்து இயக்குனரகம் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு உள்ளது. இதன்படி, அனைத்து விமான பயணிகளும் முக கவசங்களை அணிவது உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதுடன், தங்களுடைய பயணம் முழுவதும் பயணிகள் அவற்றை அணிந்திருக்கவும் உறுதி செய்திடல் வேண்டும் என விமான நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

சில விதிவிலக்கான சூழ்நிலைகளில், அனுமதிக்கப்பட்ட காரணங்களுக்காக மட்டுமே முக கவசங்களை நீக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

விமானங்களில் பயணிகள் அனைவரும் கொரோனா பாதுகாப்பு விதிகளை முறையாக கடைப்பிடிக்கும்படி தொடர்ந்து நிறுவனங்கள் அறிவிப்புகளை மேற்கொள்ள வேண்டும். தேவைப்பட்டால், கூடுதல் முக கவசங்களை விமான நிறுவனங்கள் வழங்க முன்வர வேண்டும் என்றும் தெரிவித்து உள்ளது.

ஒருவேளை மேற்கூறிய அறிவுரைகளை பின்பற்ற தவறும் எந்த பயணியாக இருப்பினும், தொடர்ச்சியான எச்சரிக்கைக்கு பின்னரும் கடைப்பிடிக்காத நபர்கள் (ஆண் அல்லது பெண்) உடனடியாக, விமானம் புறப்படுவதற்கு முன்பு கீழே இறக்கி விடப்பட வேண்டும் என்றும் தெரிவித்து உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்