இளம் அரசியல்வாதிகள் அடிக்கடி கட்சி மாறக்கூடாது - வெங்கையா நாயுடு அறிவுரை

அரசியலில் எதிராளிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும், தவறான செயல்கள் செய்வதை தடுக்க வேண்டும்.

Update: 2024-01-11 22:57 GMT

புனே,

மராட்டிய மாநிலம் புனேயில் எம்.ஐ.டி. அரசு பள்ளி மற்றும் எம்.ஐ.டி. உலக அமைதி பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய 13-வது 'பாரதீய சத்ர சன்சாத்' என்ற மாணவர்களை தலைவர்களாக மாற்ற ஊக்குவிக்கும் நிகழ்ச்சியின் தொடக்க விழா நடைபெற்றது. இதில் முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்து கொண்டு பேசியதாவது:-

மாணவர்களாகிய நீங்கள் அரசியலில் சேர வேண்டும். இளம் அரசியல்வாதிகள் அடிக்கடி கட்சி மாறக்கூடாது. கட்சி தாவல்கள் அரசியலில் மக்களின் ஆர்வத்தை இழக்க வழிவகுக்கும், இது ஜனநாயகத்திற்கு தீங்கு விளைவிக்கும். அரசியலில் சேருங்கள். ஆக்கப்பூர்வமாகவும், கவனத்துடன் இருங்கள். இப்போதெல்லாம் யார், எந்த கட்சியில் இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்வது கடினமாக உள்ளது. நான் பா.ஜனதாவில் சேர்ந்தேன். நம்பிக்கையுடன் உழைத்து அந்த கட்சியின் தலைவர் ஆனேன்.

சித்தாந்தத்தை கடைபிடியுங்கள். கட்சி தலைவர் ஆணவமாகவும், சர்வாதிகாரியாகவும் மாறினால் கட்சிக்குள் விவாதித்து முடிவு எடுங்கள். இதுதான் வழி. இல்லையெனில் அரசியலின் மீதான மரியாதையை மக்கள் இழக்க நேரிடும். வளரும் அரசியல்வாதிகளுக்கு இதுதான் எனது அறிவுரை.

அரசியலில் எதிராளிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும், தவறான செயல்கள் செய்வதை தடுக்க வேண்டும். ஆனால் அவர்கள் எதிரிகள் அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அரசு மற்றும் சட்டசபையை செயல்பட அனுமதிக்க வேண்டும். சட்டசபை உறுப்பினர்கள் மக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும், அவை நடவடிக்கைகளை சீர்குலைக்கக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்