சட்டம், ஒழுங்கை எங்களிடம் ஒப்படையுங்கள்; டெல்லியை பாதுகாப்பாக மாற்றுவோம்: கெஜ்ரிவால்
சட்டம் மற்றும் ஒழுங்கை எங்களிடம் ஒப்படையுங்கள் என்றும் டெல்லியை பாதுகாப்பான நகராக நாங்கள் மாற்றுவோம் என்றும் முதல்-மந்திரி கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
புதுடெல்லி,
டெல்லியில் பிரகதி மைதான் சுரங்கத்தில் கடந்த சனிக்கிழமை வாகனம் ஒன்று குருகிராம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அதனை 4 மர்ம நபர்கள் துப்பாக்கி முனையில் வழிமறித்து, நிறுத்தி அதில் இருந்த ரூ.2 லட்சம் பணம் அடங்கிய மூட்டையை கொள்ளையடித்து விட்டு தப்பினர். இது நகர் முழுவதும் பரபரப்பு ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தில் 2 பேர் நேற்றிரவு கைது செய்யப்பட்டனர். சமீப நாட்களில் டெல்லியில் பல இடங்களில் தாக்குதல்கள் நடந்து உள்ளன. டெல்லியில் கல்காஜி பகுதியில் நேற்று முன்தினம் (ஞாயிற்று கிழமை) 28 வயது பெண் முகத்தில் மர்ம நபர் ஆயுதம் கொண்டு தாக்கியுள்ளார்.
டெல்லியின் பிரிஜ்புரி என்ற இடத்தில் கடந்த வெள்ளி கிழமை 19 வயது வாலிபர் கத்தியால் தாக்கப்பட்டார். அவரது உறவினருக்கும் தாக்குதலில் காயம் ஏற்பட்டது.
டெல்லி பல்கலை கழகத்தின் தெற்கு வளாக பகுதியில் மோதலின்போது, மாணவர் ஒருவர் குத்தி கொல்லப்பட்டார். இதுபோன்ற வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து வருவது மக்களிடையே அச்ச உணர்வை அதிகரித்து உள்ளது.
இதன் தொடர்ச்சியாக, டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே. சக்சேனா, சட்டம் மற்றும் ஒழுங்கு சூழல் பற்றி ஆலோசிக்க கூட்டம் ஒன்றை நடத்த போலீசாருக்கு அழைப்பு விடுத்து உள்ளார்.
இதுபற்றி முதல்-மந்திரி கெஜ்ரிவால் கூறும்போது, இந்த கூட்டம் வழக்கம்போல் நடைபெறும் ஒரு நடைமுறை ஆகும் என கூறியுள்ளார்.
டெல்லியில், சட்டம் மற்றும் ஒழுங்கை சரி செய்ய மத்திய அரசிடம் திட்டம் எதுவும் இல்லை என தெரிகிறது. ஜி-20 கூட்டம் நடைபெற திட்டமிட்டுள்ள பகுதியில், வாகனம் ஒன்றை நிறுத்தி கொள்ளைக்காரர்கள் பணம் கொள்ளையடித்து சென்று உள்ளனர். டெல்லியில் வனராஜ்ஜியம் நடக்கிறது. ஒருவருக்கும் பாதுகாப்பு இல்லை என கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
எங்கள் பணியை நாங்கள் செய்ய விடுங்கள். உங்கள் பணியை நீங்கள் மேற்கொள்ளுங்கள். சட்டம் மற்றும் ஒழுங்கை உங்களால் கையாள முடியாவிட்டால், சட்டம் மற்றும் ஒழுங்கை எங்களிடம் ஒப்படையுங்கள். டெல்லியை பாதுகாப்பான நகராக மாற்றுவது எப்படி? என நாங்கள் செய்து காட்டுவோம் என்று கெஜ்ரிவால் கூறியுள்ளார்.