வழக்குகள் தேங்குவதற்கு நீதித்துறை அமைப்பின் குறைபாடே காரணம் - மத்திய மந்திரி
வழக்குகள் தேங்குவதற்கு நீதித்துறை அமைப்பின் குறைபாடே காரணம் என்று மத்திய மந்திரி கிரண் ரிஜிஜூ தெரிவித்தார்.
உதய்பூர்,
ராஜஸ்தானின் உதய்பூரில் உள்ள சுகாதியா பல்கலைக்கழகத்தில் இந்திய சட்ட ஆணையம் சார்பில் நடத்தப்பட்ட கருத்தரங்கில் மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜிஜூ கலந்து கொண்டார்.
நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து கவலை தெரிவித்த மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜிஜூ, இது நீதிபதியின் குற்றம் அல்ல, நீதித்துறை அமைப்பின் குற்றம் என்றும், இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண அரசு கூடுதல் நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.
இதுதொடர்பாக மேலும் பேசிய அவர், "இந்திய நீதிமன்றங்களில் 4.90 கோடிக்கும் அதிகமான வழக்குகள் தேங்கி உள்ளன. இந்த அளவுக்கு வழக்குகள் தேங்குவது எந்த ஒரு சமூகத்திற்கும், நாட்டுக்கும் நல்லது அல்ல.
வழக்குகள் அதிக அளவில் தேங்குவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. நீதிபதிகளின் நிலை மிக மோசமாக உள்ளது. ஒரு நீதிபதி ஒரு நாளைக்கு 50 - 60 வழக்குகளை கையாள்கிறார். நீதிபதிகள் பல்வேறு வழக்குகளை தீர்க்கிறார்கள். ஆனால், புதிய வழக்குகள் இரண்டு மடங்காக வருகின்றன. இவ்வளவு வழக்குகள் ஏன் நிலுவையில் இருக்க வேண்டும் என்ற கேள்வி பொதுமக்களுக்கு எழுவது இயல்பு.
நீதிபதிகள் எந்த அளவு பணிச்சுமையுடன் இருக்கிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியாது. உண்மையில் இது நீதிபதிகளின் குற்றம் அல்ல; நீதித் துறை அமைப்பில் உள்ள குற்றம்.
இந்த பிரச்சினைக்கு உள்ள பல்வேறு தீர்வுகளில் மிகவும் முக்கியமானது நீதித் துறையை டிஜிட்டல் மயமாக்குவது. காகிதத் தாள் பயன்பாடு இல்லாத நீதித் துறையை உருவாக்குவதற்கான முயற்சியை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது" என்று கிரண் ரிஜிஜூ கூறினார்.